`பணம் ரூ.14 கோடி; சொத்து ரூ.700 கோடி!’ - மிரள வைத்த இலங்கைத் தாக்குதல் நடத்தியவர்களின் சொத்து மதிப்பு | sriLanka blasts terror group has Rs 7 bn worth assets

வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (07/05/2019)

கடைசி தொடர்பு:13:01 (07/05/2019)

`பணம் ரூ.14 கோடி; சொத்து ரூ.700 கோடி!’ - மிரள வைத்த இலங்கைத் தாக்குதல் நடத்தியவர்களின் சொத்து மதிப்பு

லங்கையில் குண்டு வைத்தவர்களின் சொத்து மதிப்பு தொடர்பான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் ஆலயங்கள் உட்பட பல இடங்களில் குண்டுகள் வெடித்தன. தற்கொலைப்படை தாக்குதலும் நடத்தப்பட்டது.  250 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். 500 பேர் காயமடைந்தனர். ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புடைய தேசிய தவ்கீத் ஜமாத் இந்த நாச வேலையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.  

இலங்கை குண்டுவெடிப்பு ஆலயங்களில் பிரார்த்தனை ரத்து

குண்டுவெடிப்பு தொடர்பாக இலங்கை சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டுவெடிப்பில் தொடர்புடைய தேசிய தவ்கீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த 73 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு விசாரணையை இரு அமைப்புகள் நடத்தி வருகின்றன. இலங்கை சி.ஐ.டி அமைப்பு 54 பேரிடம் விசாரணை நடத்துகிறது.  தீவிரவாத தடுப்பு விசாரணை அமைப்பு 19 பேரிடம் விசாரணை நடத்துகிறது. குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 10 பெண்களுக்கும் தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இலங்கை சி.ஐ.டி போலீஸார் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களின் வங்கிக் கணக்கு மற்றும் சொத்து மதிப்புகளை ஆராய்ந்த போது அதிர்ச்சி தகவல் கிடைத்தது. தேசிய தவ்கீத் ஜமாத்திடமிருந்து ரூ.7 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. மீதி பணம் பல்வேறு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.14 கோடி. இந்த வங்கிக் கணக்குள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. தவ்கீத் ஜமாத்தின் சொத்து மதிப்பு ரூ.700 கோடி ஆகும்.  

இலங்கை குண்டுவெடிப்பு

இதற்கிடையே நீர்கொழும்புவில் முஸ்லிம் மக்களை மர்மக் கும்பல் தாக்கியதோடு, பள்ளிவாசலை இடித்தும் சேதப்படுத்தியது. கார்கள், இரு சக்கர வாகனங்களையும் உடைத்தது. சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்ததும், அந்தக்  கும்பல் தப்பி ஓடி விட்டது. கொழும்பு பேராயர் மால்கம் ரஞ்சித் சம்பவ இடத்துக்கு வந்து மக்களிடையே சமாதானமாக வாழும்படி அறிவுறுத்தியதோடு, மக்களை அமைதி காக்கும்படியும்  வேண்டுகோள் விடுத்தார். ``இரு சமய மக்களும் இணக்கமாக வாழ வேண்டும். காலம் காலமாக இணக்கமாக வாழ்ந்து வந்துள்ளோம். இனியும், அப்படித்தான் வாழ வேண்டும். இங்கே பள்ளி வாசல்களை இடித்தது கண்டு மனம் வருந்துகிறேன். இது கிறிஸ்தவ மக்கள் செய்யக் கூடிய காரியம் அல்ல. சிறிய அடிப்படை வாதக்குழு செய்த தவறுக்கு முஸ்லிம் மக்கள் பொறுப்பு அல்ல'' என்று பேராயர் பேசினார்.

இலங்கையில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆலயங்களில் பிரார்த்தனை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால், தொலைக்காட்சி வழியாக ஆயர்களின் உரை வழங்கப்பட்டு வருகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க