இளவரசி மேகனுக்கு ஆண் குழந்தை! - கொண்டாட்டத்தில் இங்கிலாந்து அரண்மனை | England prince Harry wife Meghan gives birth to a boy

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (07/05/2019)

கடைசி தொடர்பு:16:30 (07/05/2019)

இளவரசி மேகனுக்கு ஆண் குழந்தை! - கொண்டாட்டத்தில் இங்கிலாந்து அரண்மனை

ங்கிலாந்து அரசக் குடும்பத்தில் அடுத்த வாரிசு பிறந்துவிட்டது. இளவரசர் சார்லஸ் - மறைந்த இளவரசி டயானாவின் இளைய மகன் ஹாரிக்கும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கலுக்கும் சென்ற வருடம் மே மாதம் கோலாகலமாக திருமணம் நடந்தது. தொடர்ந்த சில மாதங்களில் மேகன் கருத்தரிக்க, இங்கிலாந்து மக்கள் அரசக் குடும்பத்தின் புது வரவை ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்த நிலையில், இளவரசி மேகனுக்கு ஆண் குழந்தைப் பிறந்ததை அதிகாரபூர்வமாக பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டது. இளவரசர் ஹாரியும், தன்னுடைய இன்ஸ்டாகிராமில் `மே 6-ம் தேதி அதிகாலை முதல் மகன் பிறந்திருப்பதாக' அறிவித்தார். 

ஹாரி - மேகன் மார்கல்

மறைந்த டயானாவின் சகோதரர் சார்லஸ் ஸ்பென்சர் தன்னுடைய மருமகன் ஹாரிக்கு மகன் பிறந்ததை, `இது மிக மிக சந்தோஷமான விஷயம்' என்று ட்வீட் செய்ய, இளவரசி மேகனின் தந்தை தாமஸ் மார்கில், `என்னுடைய பேரன் பிரிட்டிஷ் அரசக் குடும்பத்தில் பிறந்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். என் பேரன் வளர்ந்ததும் பிரிட்டிஷ் அரசக் குடும்பத்தின் கிரீடத்தையும் கண்ணியத்தையும் நிச்சயம் காப்பாற்றுவான்' என்று பெருமிதப்பட்டிருக்கிறார். அரசக் குடும்பத்தின் சிறுசிறு விஷயங்களையும் கொண்டாடும் இங்கிலாந்து மக்கள் தங்களின் புத்தம் புது குட்டி இளவரசனின் வரவையும் கொண்டாடி வருகிறார்கள். இந்தப் புது இளவரசனின் தாத்தா சார்லஸ்தான் தற்போது அரச வாரிசாக இருக்கிறார். அவரையடுத்து இவருடைய முதல் மகன் வில்லியம், அவருடைய 3 குழந்தைகள், அதன் பிறகு ஹாரி, இவரையடுத்து தற்போது பிறந்துள்ள புது இளவரசன் பிரிட்டிஷ் அரியணை ஏறும் வரிசையில் 7-வது இடத்தில் இருக்கிறார்.