`பாலியல் வழக்கு; விவாகரத்து நோட்டீஸ்; வேலை பறிப்பு!' - இளம் பெண்ணுக்கு உதவியவருக்கு நேர்ந்த கதி | Australian man faced troubles because of false complaint

வெளியிடப்பட்ட நேரம்: 16:21 (07/05/2019)

கடைசி தொடர்பு:16:21 (07/05/2019)

`பாலியல் வழக்கு; விவாகரத்து நோட்டீஸ்; வேலை பறிப்பு!' - இளம் பெண்ணுக்கு உதவியவருக்கு நேர்ந்த கதி

ஆஸ்திரேலியாவில் இளம் பெண்ணுக்கு உதவி செய்த ஒருவர், அவராலே சிறைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். அதுவும் பாலியல் புகாரில். 

இளம் பெண்ணுக்கு உதவிய பாஸிக்

Photo Credit: Nine News

கடந்த வருடம் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சிட்னி நகருக்கு அருகில் 19 வயது இளம் பெண் ஒருவர் சென்ற கார் விபத்தில் சிக்குகிறது. இதில் காருக்கு சிறிய அளவில் சேதம் உண்டானது. இதையடுத்து அந்தப் பெண் அருகில் இருக்கும் பணிமணிக்கு காரை  கொண்டு செல்கிறார். அப்போது வழியில் பாஸிக் என்னும் 36 வயது நபர் அவருக்கு உதவுவதாகச் சொல்கிறார். அந்த சாலையில் சுமார் 2 மணி நேரம் முயற்சி செய்து காரை சரி செய்தும் கொடுக்கிறார். பின் இருவரும் பேசிக்கொண்டு பிரிகின்றனர். கார் புறப்பட்ட பின் சிறிது தூரம் அவரைப் பின்தொடர்கிறார் பாஸிக். இந்தக் காட்சிகள் அனைத்தும் சிசிடிவி காட்டிகளில் பதிவாகியுள்ளன. 


உதவி

ஆனால் அடுத்த நாள் பாலியல் வழக்கில் பாஸிக் கைது செய்யப்படுகிறார். இவர் உதவி செய்த அதே பெண்தான் புகார் அளித்தவர். தானாக வந்து உதவி செய்தவர் பின் தன்னிடம் மோசமாக நடந்துகொண்டதாகவும், அதனால் அங்கு இருந்து உடனடியாகப் புறப்பட்டதாகவும் ஆனாலும் அவர் பின் தொடர்ந்து வந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக 4 பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். 2 வாரம் கடுங்காவலில் இருந்த அவர் தொடர்ந்து வழக்கைச் சந்தித்து வந்தார். ஆனால் தொடர்ந்து விசாரணையில் தான் ஓர் அப்பாவி எனக் கூறிவந்தார். 

இது தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வந்த அதிகாரிகள் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அதில் அவர்தவறாக நடந்துகொண்டதாக அதிகாரிகளுக்குத் தெரியவில்லை. இதனிடையே அந்த காரை அவர் பின் தொடர்ந்து சென்றதுக்குக் காரணம் சொன்ன பாஸிக், பாதி வழியில் மீண்டும் பிரச்னை ஆகி நின்றால் உதவுவதற்காகச் சென்றேன் என்றிருக்கிறார். 

உதவி

இதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணிடம் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அப்போது அந்தப்பெண் பொய்யான புகார் அளித்ததை ஒப்புக்கொண்டார். இதை தொடர்ந்து நேற்று பாஸிக் இந்த வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் பொய்யான தகவல் அளித்ததுக்கான விசாரணைக்கு அடுத்த வாரம் அப்பெண் ஆஜராக வேண்டும் என அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கார்

தான் விடுவிக்கப்பட்டது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்த பாஸிக், இந்த பொய் வழக்கு தனது வாழ்க்கையே மாற்றிவிட்டதாகக் கூறுகிறார். பாலியல் வழக்கு காரணமாக தனது வேலையை இழந்த இவர் தற்போது விவாகரத்து வழக்கையும் சந்தித்து வருகிறார். ஆம், இவர் மனைவி இந்தப் பாலியல் வழக்கு காரணமாக அவர் மீது விவாகரத்து வழக்குத் தொடுத்துள்ளார். இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் இளம் பெண்களுக்கு தான் உதவவே பயமாக இருப்பதாகச் சொல்கிறார் பாஸிக்.