`ஆனந்தத்தை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை!' - இணையத்தை ஈர்த்த ஆப்கன் சிறுவனின் நடனம் #ViralVideo | Afghan Boy Dance hits Internet

வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (07/05/2019)

கடைசி தொடர்பு:19:27 (08/05/2019)

`ஆனந்தத்தை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை!' - இணையத்தை ஈர்த்த ஆப்கன் சிறுவனின் நடனம் #ViralVideo

ஆப்கான் சிறுவன் நடனம்

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் அரசுப்படையினருக்கும் இடையே நீண்டகாலமாகப் போர் நீடித்து வருகிறது. இதில் பெண்கள், குழந்தைகள் என அப்பாவி பொதுமக்கள் பலியாகிவருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் இந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது. ஆப்கானிஸ்தானில் செயல்படும் ஐக்கிய நாடுகளின் உதவிய மையத்தின் தரவுப்படி கடந்த 2018-ம் ஆண்டு மட்டும் 927 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

இந்த சோகத்துக்கு இடையில் ஒரு ஆப்கான் குழந்தையின் நடனம் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. கடந்தாண்டு நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் அஹ்மது என்ற சிறுவன் காயமடைந்துள்ளான். அவனது வலதுகாலில் பலத்த காயமடைந்துள்ளது. தனக்கு ஏன் இந்த நிலைமை என்பதுகூட அவனுக்குத் தெரியாது. ஓடி விளையாட வேண்டிய பருவத்தில் தனது வலதுகாலை இழந்ததால் மற்ற குழந்தைகளைப் போல துள்ளிக் குதித்து விளையாடமுடியவில்லை. துயரங்களுக்கு மத்தியில் நம்பிக்கையுடன் காத்திருந்தனர் அவனின் குடும்பத்தினர். இந்த நிலையில், அங்கு செயல்படும் ரெட் க்ராஸ் அமைப்பினர் சிறுவனுக்கு உதவிபுரிந்துள்ளனர்.

அஹ்மதுக்கு செயற்கை கால்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் பிரபலமான பாடல் ஒன்றுக்கு நடனமாடும் அஹ்மதுவின் வீடியோ ரெட் க்ராஸ் அமைப்பினர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோதான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. ஏராளமானவர்கள் தங்களது பிரார்த்தனையையும், அன்பையும் சமூகவலைதளம் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரெட் க்ராஸ் அமைப்பு, `லோகர் பகுதியில் நடந்த தாக்குதலில் அஹ்மது தனது வலது காலை இழந்த நிலையில் இங்கு அனுமதிக்கப்பட்டான். அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது கால் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மகிழ்ச்சியைத்தான் நடனம் மூலம் வெளிப்படுத்தியுள்ளான். இது அவனுடைய வாழ்க்கையை மாற்றியுள்ளது. முகத்தில் புன்னகையை வரவழைத்துள்ளது' எனப் பதிவிட்டுள்ளனர்.