இந்தியாவுக்கு 'அரபு ஷேக்குகள்'... பாகிஸ்தானுக்கு 'சீனர்கள்' ! - பரிதாபத்தில் இளம் பெண்கள் | more than thousand Pakistani girls trafficked by Chinese men as brides

வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (08/05/2019)

கடைசி தொடர்பு:11:06 (08/05/2019)

இந்தியாவுக்கு 'அரபு ஷேக்குகள்'... பாகிஸ்தானுக்கு 'சீனர்கள்' ! - பரிதாபத்தில் இளம் பெண்கள்

டந்த வருடம், ஹைதராபாத்தில் ஏராளமான அரபிகள் கைதுசெய்யப்பட்டனர். பணம் கொடுத்து, இந்தியாவிலிருந்து இளம் பெண்களைத் திருமணம் செய்து, தங்கள் நாட்டுக்கு அழைத்துச்செல்வதற்காக வந்தவர்கள் அவர்கள்.  போலீஸார் நடத்திய அதிரடியில், தற்போது ஹைதராபாத்துக்கு அரபு ஷேக்குகள் வரத்து குறைந்துள்ளது. அதேபோல, பாகிஸ்தான் நாட்டில் ஏராளமான இளம் பெண்களை சீனர்கள் திருமணம் செய்து தங்கள் நாட்டுக்கு அழைத்துச்செல்கின்றனர். இப்படி, திருமணம் செய்து கொடுக்கப்படும் பெண்கள், பல துயரங்களை அங்கே அனுபவிக்கின்றனர்.

பாகிஸ்தான் பெண்களை கடத்தும் சீனர்கள்

குறிப்பாக, கிறிஸ்தவ பெண்களைக் குறிவைத்து சீனர்கள் இயங்குகின்றனர். இதற்காக, ஏராளமான புரோக்கர்கள் அந்த நாட்டில் உள்ளனர். ஞாயிற்றுக்கிழமைகளில் ஆலயங்களில் ஆராதனை முடிந்து வரும்போது, சீனர்கள் பெண்களை நேரடியாகத்  தேர்வு செய்கின்றனர். பின்னர், புரோக்கர் வழியாக அவர்களின் பெற்றோர்களை அணுகுகின்றனர்.  ஏழ்மை நிலையைப் பயன்படுத்தி , 3000 முதல் 5000 டாலர்கள் வரை வாங்கிக்கொண்டு மகளைத் திருமணம் செய்து கொடுக்க பாகிஸ்தான் பெற்றோர்கள் சம்மதிக்கின்றனர். சீனர்கள் காட்டும் பணம், இளம் பெண்களின் பெற்றோரின் கண்களை மறைத்துவிடுகிறது. காலம் காலமாக சீனர்கள் இளம் பெண்களை பாகிஸ்தானுக்குக்  கடத்தும் சம்பவங்கள் அதிகரித்ததையடுத்து, பாகிஸ்தான் அரசு  விழித்துக்கொண்டது. பஞ்சாப் மாகாணத்தில் இந்த நோக்கத்துடன்  தங்கியிருந்த 8 சீனர்களை பாகிஸ்தான் போலீஸ் அதிரடியாகக் கைதுசெய்துள்ளது. இவர்களுக்கு உதவிய 4 பாகிஸ்தானியர்களும் பிடிபட்டுள்ளனர்.

பல இளம் பெண்களைத் திருமணம் செய்து அழைத்துச்சென்று  சீனர்கள் கொடுமைப்படுத்துவதும் வழக்கமாக உள்ளது. புது நாடு, கலாசாரம், உணவுப் பழக்கவழக்கம், மொழிப் பிரச்னையால் இப்படித் திருமணம் செய்து கொடுக்கப்படும் பெண்கள், மனத்தளவில் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து  பஞ்சாப் மாகாண சிறுபான்மை நலத்துறை அமைச்சர்  அஸ்லாம் அகஸ்டின் கூறுகையில், '' பெற்றோர்கள் பேராசை காரணமாகத் தங்கள் மகள்களைப் பணம் வாங்கிக்கொண்டு திருமணம் செய்து கொடுக்கின்றனர். நான் பாதிக்கப்பட்ட இளம்பெண்களைச் சந்தித்துள்ளேன். அவர்கள் பரம ஏழைகள். இது, மிகப் பெரிய மனிதக் கடத்தல். பாகிஸ்தான் பெண்களை சீனாவுக்குக்  கொண்டுபோய் செக்ஸ் அடிமையாகப் பயன்படுத்துகின்றனர். கிறிஸ்தவ ஆலயங்களில் உள்ள மத போதகர்களும்கூட சீனர்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர்'' என்று  சொல்கிறார்.  

பாகிஸ்தான் இளம் பெண்கள் கடத்தல்

கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து தற்போது வரை 750 முதல் 1000 பாகிஸ்தான் இளம் பெண்கள் திருமணம் என்ற பெயரில் சீனாவுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.  பாகிஸ்தானில் சீனா, பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறது. அங்கே,  பணிபுரியும் சீனர்கள் கூட பாகிஸ்தான் பெண்களைக் கடத்துகின்றனர்.  மேலும், தாங்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிடுவதாகவும் வாக்குறுதி அளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 

லாகூர் அருகேயுள்ள குஜ்ரன்வாலா என்ற இடத்தில் மட்டும்  இரண்டே  மாதங்களில் 100 இளம் பெண்களை சீனர்கள் திருமணம் செய்துள்ளனர். குஜ்ரன்வாலாவைச் சேர்ந்த போதகர் மன்ச் மோரிஸ், '' இங்கே நிறையப் போதகர்கள் சீனர்களுக்கு புரோக்கர்கள் போலச் செயல்படுகின்றனர். உங்கள் மகள்களுக்காக அவர்கள் நம் மதத்தைத் தழுவுகின்றனர் என்று தங்கள் ஆலயத்துக்கு வரும் பெற்றோர்களை மூளைச் சலவை செய்கின்றனர். பணத்தைத் தவிர வேறு எதற்காகவும் இந்தத் திருமணங்கள் நடப்பதில்லை. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்''  என்கிறார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க