`உடல் நடுங்கினோம், அனைவரும் கதறினோம்!' - பள்ளியில் மாணவர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு | 1 student killed, 7 injured in Colorado school shooting

வெளியிடப்பட்ட நேரம்: 11:16 (08/05/2019)

கடைசி தொடர்பு:11:16 (08/05/2019)

`உடல் நடுங்கினோம், அனைவரும் கதறினோம்!' - பள்ளியில் மாணவர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவின் கொலராடோ (Colorado) மாகாணம், ஹைலேண்ட் ரான்ச் என்ற பகுதியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பள்ளியில் நேற்று பிற்பகல் இரண்டு மாணவர்கள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அதே பள்ளியில் படிக்கும் மாணவர்கள், சக மாணவர்களைத் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொலோரடோ துப்பாக்கிச் சூடு

துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு மாணவர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஒருவர் 18 வயதைத் தாண்டியவர் என்றும் மற்றொருவர் 18 வயதுக்கும் குறைவாக உள்ளவர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதில் இறந்த மாணவர் 18 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

கொலோரடோ துப்பாக்கிச் சூடு

ஸ்டெம் (STEM - science, technology, engineering, and mathematics) பள்ளியில் படிக்கும் சக மாணவர் ஒருவர் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து கூறுகையில், “நாங்கள் அனைவரும் வகுப்பறையில் அமர்ந்திருந்தோம். அப்போது வகுப்பறையின் உள்ளே வந்த ஒருவன் தன் கிட்டார் பையில் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து திடீரென எங்களை நோக்கி சரமாரியாகச் சுடத்தொடங்கினான். அதைப் பார்த்ததும் எங்கள் வகுப்பறையிலேயே இருந்த மற்றொருவனும் எங்களை நோக்கித் துப்பாக்கிச்சூடு நடத்தினான். எங்கள் அருகில் இருந்த ஒருவனே துப்பாகிச்சூடு நடத்தியதை பார்த்ததும் எனக்கு உடல் நடுங்கி பயமாக இருந்தது. நாங்கள் அனைவரும் கதறினோம். இதில் என் நண்பனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது’ எனக் கூறியுள்ளார்.

அச்சத்தில் மாணவர்கள்

துப்பாக்கிச்சூடு குறித்து பேசிய கொலராடோ போலீஸ், “ ஸ்டெம் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் எட்டு மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 18 வயது மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் பெயரை அறிவிக்க இயலாது. தாக்குதலில் ஈடுபட்ட இருவரும் அதே பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள்தான். 

மாணவர்களை அழைத்து செல்லும் பெற்றோர்

ஸ்டெம் பள்ளியில் தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என மூன்று பிரிவுகள் உள்ளன. உயர்நிலைப் பள்ளி வகுப்பறையில்தான் தாக்குதல் நடத்தப்பட்டது. இரண்டு மாணவர்களைத் தவிர வேறு குற்றவாளிகள் பள்ளியில் பதுங்கியுள்ளனரா என்ற சந்தேகம் எழுந்தது. அது தொடர்பாக நடத்திய சோதனையில் அப்படி யாரும் இல்லை. இரண்டு மாணவர்கள் மட்டுமே திட்டமிட்டு இதைச் செய்துள்ளனர். அவர்களைக் கைது செய்துள்ளோம். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். பள்ளி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

கொலாரடோ துப்பாக்கிச்சூடு

1999-ம் ஆண்டு அதே கொலராடோ மாகாணத்தில் உள்ள மற்றொரு பள்ளியிலும் இதே போன்ற துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. அதன் 20-ம் ஆண்டு நினைவு நாள் கடந்து ஒரு மாதம்கூட ஆகாத நிலையில் அங்கு மீண்டும் இப்படி ஒரு தாக்குதல் நடந்துள்ளது அப்பகுதி மக்களையும் பெற்றோர்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

கொலாரடோ துப்பாக்கிச்சூடு

‘துப்பாக்கிச்சூடு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுடன் நாங்கள் எப்போதும் துணை நிற்போம். இறந்தவரின் குடும்பத்துக்கு எங்கள் அனுதாபங்கள் மற்றும் காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற இறைவனைப் பிரார்த்தனை செய்கிறோம். அந்த மாகாணத்தில் உள்ள அதிகாரிகளுடன் நாங்கள் எப்போதும் தொடர்பில் உள்ளோம்’ என அமெரிக்க வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.