`இந்த இணையதளத்தில் ஒரு வீட்டின் விலை 77 ரூபாய்தான்!' - இத்தாலி அரசின் முயற்சி | The Italian village is selling homes for less than 100 Rs

வெளியிடப்பட்ட நேரம்: 15:08 (08/05/2019)

கடைசி தொடர்பு:15:08 (08/05/2019)

`இந்த இணையதளத்தில் ஒரு வீட்டின் விலை 77 ரூபாய்தான்!' - இத்தாலி அரசின் முயற்சி

இத்தாலி நாட்டில் மிஸம்லி பகுதியில் விற்பனைக்கு வந்திருக்கும் வீடுகளின் விலையைக் கேட்டால் பலர் ஆச்சர்யப்படலாம். வெறும் நூறு ரூபாய்க்குக் கீழ் வீடுகளின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

`இந்த இணையதளத்தில் ஒரு வீட்டின் விலை 77 ரூபாய்தான்!' - இத்தாலி அரசின் முயற்சி

கரத்திற்கு மிக அருகில், குறைந்த விலையில் வீடுகள் விற்பனைக்கு இருக்கின்றன என்ற விளம்பரத்தைத் தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் பார்க்க முடியும். எப்படியிருந்தாலும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டு விஷயங்கள் அப்படியே இருப்பதற்குச் சாத்தியம் அல்ல. ஒன்று வீடு இருக்கும் இடம் நகரத்துக்கு அருகில் இருக்காது; அடுத்தது விலையும் குறைவாக இருக்காது. ஆனால் வெறும் 77 ரூபாய் என்ற விலையில் இத்தாலியில் வீடு விற்பனைக்கு இருக்கிறது. இது நிச்சயம் ஏமாற்று வேலை அல்ல. கொஞ்சம் முயற்சி செய்தால் உண்மையாகவே அந்நாட்டில் உள்ள ஒரு நகரத்தில் வீடு ஒன்றை வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு.

இத்தாலி

இத்தாலி நாட்டில் சிசிலி பகுதியின் நடுவே அமைந்திருக்கிறது மிஸம்லி (Mussomeli) என்ற நகரம். அங்கேதான் இவ்வளவு விலை குறைவான வீடுகள் விற்பனைக்கு வந்திருக்கின்றன. இந்த வீடுகளை அரசே விற்பனை செய்கிறது. வாங்கும் வேலையை எளிதாக்கும் வகையில் இணையதளம் ஒன்றும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஊரிலிருக்கும் கட்டடங்கள் பல வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்டவை. இங்கே வசதிகளும் கொஞ்சம் குறைவு என்பதால் இருந்த மக்களில் பெரும்பாலானோர் நகர்ப்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து சென்றுவிட்டார்கள். அவர்கள் விட்டுச் சென்ற பல வீடுகள் இங்கே காலியாகத்தான் இருக்கின்றன.

மிஸம்லி (Mussomeli)

கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் அவற்றைத்தான் விற்பனை செய்ய முடிவு செய்திருக்கிறது இத்தாலி அரசாங்கம். வீடுகளுக்கு விலையாக 1 யூரோ நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதாவது இந்திய மதிப்பில் 77 ரூபாய். இந்தப் பகுதியில் தற்போது வரை 100 வீடுகள் விற்பனைக்குத் தயாராக இருக்கின்றன, அதில் சில விற்பனையாகி விட்டன. மேலும் இந்தப் பட்டியலில் 400 வீடுகள் இணையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வீடுகளின் போட்டோக்களை இணையதளத்தில் சென்று பார்த்துக் கொள்ளலாம். பிடித்திருந்தால் அதை வாங்குவதற்காக எங்களை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஒரு நிபந்தனை!

வீடு

``நம்ம ஊர்ல இந்தப் பணத்தை வச்சு ஒரு நேரம் சாப்பிடக்கூட முடியாது, அதே இத்தாலியா இருந்தால் வீடே கிடைக்கும். அப்புறம் என்ன ஒரு வீட்டை வாங்கிப் போட்ற வேண்டிதான்” என உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் அதில் ஒரு சிறிய சிக்கலிருக்கிறது. வீட்டோட விலை என்னவோ குறைவுதான். ஆனால் அதற்கான இதரச் செலவுகள் எல்லாம் தனி என்பதுதான் அரசு இந்த மலிவு விலைக்குப் பின்னால் வைத்திருக்கும் செக். ஒரு வீட்டின் விலை என்பது 1 யூரோதான். ஆனால் அதைத் தவிர்த்து நோட்டரி கட்டணம், நிர்வாகக் கட்டணம், வருட வரிகள் இன்னும் பல கட்டணங்கள் எல்லாம் சேர்த்து அதிகபட்சமாக € 4,000 யூரோக்கள் வரைக்கும் செலவாகலாம். இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 3 லட்ச ரூபாய். அப்படியே இருந்தாலும் வீட்டை வாங்கியாச்சே ஒரு பத்து வருஷம் கழிச்சு போவோம் என்றெல்லாம் இருந்து விட முடியாது. அவ்வளவு செலவு செய்து உங்கள் கைக்கு வீடு வந்தால் அடுத்ததாக அதை மறு சீரமைக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறது அரசு.

வீடு

அதற்குக் காரணம் பழைமையான வீடுகள் என்பதால் அவற்றில் அப்படியே குடியேறி விட முடியாது. அதைக் கட்டாயம் மறுசீரமைக்க வேண்டும். அதற்குத் தேவைப்படும் ஆள்களும் அங்கே இருக்கிறார்கள். மேலும் இதைச்செய்யக் கால அவகாசமும் இருக்கிறது. அரசின் நிபந்தனைப்படி ஒரு வருடத்துக்குள்ளாக வீட்டை மறுசீரமைக்க வேண்டும். அதைச் செய்யத் தவறினால் பாதுகாப்பு வைப்புநிதியான 5 லட்ச ரூபாயை இழக்க வேண்டியிருக்கலாம். மேலே இருப்பதைத் தவிர வேறு சில செலவுகளையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும். மிஸம்லியில் என்றுதான் மட்டுமல்ல இத்தாலியில் இருக்கும் பல்வேறு கிராமங்களில் உள்ள வீடுகள் இப்படிக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.


டிரெண்டிங் @ விகடன்