உறவுகள் இன்றித் தவிக்கும் 200 குழந்தைகள்! - இலங்கை குண்டுவெடிப்பு விட்டுச்சென்ற சோகம் | 200 children in Sri Lanka have lost their family members

வெளியிடப்பட்ட நேரம்: 09:15 (09/05/2019)

கடைசி தொடர்பு:09:15 (09/05/2019)

உறவுகள் இன்றித் தவிக்கும் 200 குழந்தைகள்! - இலங்கை குண்டுவெடிப்பு விட்டுச்சென்ற சோகம்

இலங்கையின் தலைநகர் கொழும்பில், ஈஸ்டர் தினத்தன்று நடந்த தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலை அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது. ஈஸ்டர் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாட தேவாலயங்களுக்குச் சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பவே இல்லை. 

இலங்கை குண்டு வெடிப்பு

ஏப்ரல் 21, 2019 இலங்கை வரலாற்றில் என்றும் அழியாத ஒரு கறுப்பு நாள். கொழும்பில் உள்ள மூன்று தேவாலயங்கள், மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் என மொத்தம் எட்டு இடங்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலில், சுமார் 253 பேர் கொல்லப்பட்டனர். ஐந்நூற்றுக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இலங்கை குண்டு வெடிப்பு

இந்தத் தாக்குதலின் விளைவாக, இலங்கையில் உள்ள சுமார் 200 குழந்தைகள் தங்களின் குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளனர். அவர்களில் சிலர், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் என கொழும்பைச் சார்ந்த செஞ்சிலுவைச் சங்கம் (Red cross) தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கொழும்பில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலினால், 200 குழந்தைகள் தங்களின் குடும்பத்தினரை இழந்துள்ளனர். மேலும் சிலர், தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துவருகின்றனர்.

கொழும்பு தாக்குதல்

75-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் உள்ள உறுப்பினர்கள், பலத்த காயம் அடைந்துள்ளதால் அவர்களால் தங்களின் குடும்பத்தைச் செயல்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். படுகாயமடைந்தவர்களில் பலர், தங்களின் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். அதனால், அவர்களின் மொத்த வாழ்க்கையும் கேள்விக்குறியாகியுள்ளது. மேலும், பலருக்கு ஏற்பட்ட பலத்த காயத்தினால் வேலைசெய்ய முடியாத நிலையில் உள்ளனர்.

கொழும்பு தாக்குதல்

குண்டுவெடிப்பை நேரில் பார்த்தவர்கள், அதனால் பாதிக்கப்பட்டவர்கள், குண்டு வெடிப்பில் சிக்கி மீண்டவர்கள் என நூற்றுக்கணக்கானவர்களுக்கு உளவியல் முதலுதவி தேவைப்படுகிறது. அவர்கள் இன்னும் அந்தத் தாக்கத்திலிருந்து வெளிவரவில்லை. தாக்குதலில் பாதிக்கப்பட்ட பலரும், தங்கள் வாழ்வை எதிர்கொள்ள பல சவால்களைச் சந்தித்துவருகின்றனர்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு தாக்குதல்

இலங்கை முழுவதும், மேலும் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத் துறை எச்சரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், நாட்டின் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.