``5 மெகா தொடர்கள், 17 திரைப்படங்கள், 48 வீடியோ கேம்கள்!” - `கோகு' தினம் உருவான கதையும் பின்னணியும் #GokuDay | Article About Cartoon Character Goku

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (09/05/2019)

கடைசி தொடர்பு:13:50 (09/05/2019)

``5 மெகா தொடர்கள், 17 திரைப்படங்கள், 48 வீடியோ கேம்கள்!” - `கோகு' தினம் உருவான கதையும் பின்னணியும் #GokuDay

காதலர் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம் எனப் பல தினங்கள் தினந்தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வரிசையில் இன்றைய தினம் கோகு தினம். ஆம் கோகு என்ற கார்ட்டூன் கதாபாத்திரத்தின் தினம். ``என்னடா இகு.. பொம்மைக்கெல்லாம் தினமா".. என நீங்கள் நினைக்கலாம். அதற்கு இவைதான் காரணங்கள். 

 90'ஸ் கிட்ஸ் பலருக்கும் கோகுவையும், அதன் பவரையும் மறக்கவே முடியாது. கோகு-டிராகன் பால் ஜீ எனும் ஜப்பானிய கார்ட்டூன் தொடரின் மையக் கதாபாத்திரம். 81 நாடுகளில் ஒளிபரப்பாகி அமோக வெற்றி பெற்றது இத்தொடர். ஜப்பானிய கார்ட்டூன் தொடர்களிலேயே பெரும் வெற்றி பெற்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது இத்தொடர். புராணக் கதையையும், கற்பனையையும் கலந்துகட்டி கோகுவை உருவாக்கியிருப்பார் தொடரின் இயக்குநர் அகிரா டோரியாமா.

கோகு

குரங்கு வால் கொண்ட கோகு மார்ஷியல் கலையில் வல்லவன். அவனுக்கென்று மனிதனுக்கு இல்லாத சிறப்புத் தன்மைகள் இருக்கும். வேற்று கிரக வாசிகள் வந்து பூமியைத் தாக்கும்போது அவன் வேற்று கிரகத்தைச் சார்ந்த சையான் இனத்தவர் என்பது தெரியவரும். தன் குழுவான வெஜீட்டா, க்ரலின், மாஸ்டர் ரோஷி, கோஹான், ட்ரங்க் ஆகியோரோடு சேர்ந்து ஃப்ரீசா, மார்டின் பூ, செல் போன்ற பயங்கர பலம் வாய்ந்த வேற்று கிரகத்தைச் சேர்ந்த எதிரிகளிடமிருந்து பூமியையும், 7 டிராகன் பந்துகளையும் கோகு காப்பதே தொடரின் மையம். சண்டைக் காட்சிகளில் பறந்து விளையாண்ட கோகுவை மக்கள் வெகுவாக ரசித்தனர். எதிரிகளையும் மன்னிக்கும் கனிந்த இதயம் கொண்ட கோகு, சையான்களில் சிலருக்கு மட்டுமே வாய்க்கும் சூப்பர் சையான், சையான் கடவுள் எனும் சூப்பர் பவர்களை தன்வசம் பெற்றவன். 

கார்ட்டூன்

இது வரை 5 பெரிய தொடர்களும், 17 திரைப்படங்களும், 48 வீடியோ கேம்களும் இத்தொடரை மையமாக வைத்து வெளிவந்து வணிக ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றுள்ளன. ஜப்பானிய மொழியில் `கோ' என்பது 5 யும் `கு'  என்பது 9 யும் குறிக்கும்.. அதை மையப்படுத்தியே 9/5 என்பதைக்  கடந்த 2015 ம் வருடம் கோகு தினமாக அறிவித்தது ஜப்பானிய அரசு. எளிய துறவியின் உடை, சண்டையிடும் நேரம் தவிர்த்து முகத்தில் அரும்பும் புன்னகை, மாற்றங்களின் போது சிலிர்த்து நிற்கும் முடி என இருக்கும் கோகு எப்போதும் நினைவில் நிற்கும்.