கடலில் விழுந்த மொபைலை கண்டுபிடித்துக் கொடுத்த திமிங்கிலம்! | Whale find a mobile Accidentally Dropped It Into The Sea

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (09/05/2019)

கடைசி தொடர்பு:18:42 (09/05/2019)

கடலில் விழுந்த மொபைலை கண்டுபிடித்துக் கொடுத்த திமிங்கிலம்!

திமிங்கிலம்

கடலில் விழுந்த ஸ்மார்ட்போனை திமிங்கிலம் ஒன்று கண்டுபிடித்து அதற்குரியவரிடம் ஒப்படைக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. நார்வேவைச் சேர்ந்த இனா மன்சிகா (Ina Mansika) கடந்த மாதம் ஹாமர்ஃபெஸ்ட் பகுதிக்குச் சென்றிருந்தபோது அவரது ஸ்மார்ட்போன் தவறுதலாகக் கடலில் விழுந்திருக்கிறது. அதன் கதை அவ்வளவுதான் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே ஒரு ஆச்சர்யமான சம்பவம் அங்கே நடந்திருக்கிறது. கடலில் ஆழத்தில் இருந்து பெலூகா வகை திமிங்கிலம் ஒன்று மேலே நீந்தி வந்திருக்கிறது. அதன் வாயில் கடலில் விழுந்த ஸ்மார்ட்போன் இருப்பதைக் கண்டு ஆச்சர்யப்பட்டிருக்கிறார் இனா மன்சிகா. நீருக்கு மேலே வந்து அமைதியாக மொபைலை அவரின் கையில் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறது. அந்த வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது.

`நான் எனது பாக்கெட்டை மூட மறந்துவிட்டேன், அதனால் போன் எப்படியோ தவறி கடலில் விழுந்து விட்டது. எனவே, மொபைல் மீண்டும் கிடைக்க வாய்ப்பே இல்லையென நினைத்திருந்தேன். ஆனால் சிறிது நேரத்தில் திமிங்கிலம் வாயில் போனுடன் மேல் நோக்கி வருவது தெரிந்தது' என தி டோடோ இணையதளத்துக்குக் கொடுத்த பேட்டியில் மன்சிகா தெரிவித்திருக்கிறார். கடந்த மாதம் நார்வே கடல்பகுதியில் கண்டறியப்பட்ட இந்த பெலூகா வகை திமிங்கிலம் ரஷ்யாவால் உளவு பார்க்க அனுப்பப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் அந்தப் பகுதியை விட்டுச் செல்ல மறுத்து அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கிறது மேலும் அங்கே இருப்பவர்களிடம் நட்புறவாகவே பழகி வருகிறது.