‘அவருக்காக தினமும் பிரார்த்தனை செய்வோம்’ - இஸ்லாமியர்களுக்காக மசூதி கட்டிய கேரள கிறிஸ்தவர் | Indian Christian Built Mosque for Muslims in UAE

வெளியிடப்பட்ட நேரம்: 10:53 (10/05/2019)

கடைசி தொடர்பு:12:46 (10/05/2019)

‘அவருக்காக தினமும் பிரார்த்தனை செய்வோம்’ - இஸ்லாமியர்களுக்காக மசூதி கட்டிய கேரள கிறிஸ்தவர்

ஐக்கிய அரசு எமிரேட்ஸ் என்றாலே இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடு என அனைவருக்கும் தெரியும். அங்கு வெளிநாடுகளில் இருந்து வேலைக்குச் சென்ற பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் வாழ்ந்துவருகின்றனர். பெரிய நிறுவனங்கள், கால் டாக்ஸி ஓட்டுநர்கள், ஹோட்டல்கள் போன்ற பல தொழில்களை அவர்கள் செய்துவருகின்றனர். 

சாஜி

PC : Facebook/@SajiCheriyan

அரபு எமிரேட்ஸ், ஃபுஜைரா மாகாணத்தில் வசித்துவருகிறார் 49 வயது சாஜி செரியன். கிறிஸ்தவரான இவர், கேரளாவின் காயம்குலம் பகுதியை சொந்த ஊராகக் கொண்டவர். 2003-ம் ஆண்டு இங்கிருந்து யு.ஏ.இ சென்ற சாஜி, தற்போது அங்கு மத்திய கிழக்கு குழுக்கள் என்ற நிறுவனத்தை நடத்திவருகிறார்.  ஃபுஜைராவில் 53 வெவ்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த பல நூறு இஸ்லாமியர்கள் வாழ்ந்துவருகின்றனர். அவர்கள், தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை டாக்ஸிக்கு கொடுத்து,  ரம்ஜான்  மாதத்தில் தொழுகைக்காக நீண்ட தூரம் சென்று வழிபாடு நடத்திவந்துள்ளனர்.

அரேபியாவில்தான் கட்டிய மசூதி முன் சாஜி

இதைக் கவனித்த சாஜி, உடனடியாக முடிவெடுத்து ஃபுஜைராவில் ‘மரியம் உம் இஷா’ என்ற பெயரில் ஒரு மசூதியைக் கட்டியுள்ளார். அந்த மசூதி, ஏ.சி வசதியுடன் மிகவும் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. தற்போது, அந்த மசூதியில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திவருகின்றனர். வெளிநாடு வாழ் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது, உள்ளூரில் உள்ளவர்களும் அங்கு வந்து தொழுகை நடத்துகின்றனர். சாஜி,  15 ஆண்டுகளுக்கு முன்னர் சில தினார்களுடன் (ரூபாய் - அரேபிய மொழியில் )  அரேபியா சென்றவர். ஆனால், தற்போது தினமும் 800 இஸ்லாமியர்களுக்குத் தொழுகை விருந்தளிக்கிறார்.

மசூதி

இதுகுறித்து பேசியுள்ள சாஜி செரியன், “ கடந்த ஆண்டு மே மாதம் 17-ம் தேதி இரவு ரம்ஜான் தொடங்கிய தினத்தன்று, இந்த மசூதி தொடங்கப்பட்டது. அப்போதிலிருந்து, முக்கிய தொழுகை நாள்களில் மட்டும் இங்கு வரும் வழிபாட்டாளர்களுக்கு நான் விருந்தளித்து வந்தேன். ஆனால் இந்த ஆண்டு முதல், அனைத்து நாள்களிலும் வரும் அனைவருக்கும் விருந்தளித்துவருகிறேன். நோன்பு இருந்துவிட்டு இங்கு தொழுகை நடத்த வருபவர்களுக்கு, பழங்கள், பிஸ்கட்டுகள், ஜூஸ், தண்ணீர் மற்றும் பிரியாணி போன்றவற்றை நான் வழங்கி வருகிறேன்.  இங்கு வருபவர்கள், ஒரே பிரியாணியை உண்டு சலித்துவிடுவார்கள் என்பதால், தினமும் பல விதங்களில் பிரியாணி செய்கிறோம்” என்று கூறியுள்ளார்.

மசூதி

பாகிஸ்தானைச் சேர்ந்த 63 வயது பஸ் டிரைவர் அப்துல் குயம், சாஜியின் செயலை மிகவும் பாராட்டியுள்ளார். அவர் பேசும்போது, “ சாஜி போன்றவர்கள்தான் இந்த உலகத்துக்குத் தேவை. இவரைப் போன்றவர்கள் இல்லாமல் போனால், உலகம் முடிந்துவிடும். நாங்கள் தினமும் அவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறோம். இறைவன் அவரை ஆசீர்வதிக்கட்டும்’ எனத் தெரிவித்துள்ளார். 

 “நாங்கள் இருக்கும் பகுதியில், ஐம்பதுக்கும் மேற்பட்ட நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வாழ்ந்துவருகிறோம். அதே நிறுவனத்தில் வேலைசெய்யும்  உயர் அதிகாரிகளுக்குத் தனியாக சில குடியிருப்புகள் உள்ளன. ஆனால், அந்த மசூதிக்குச் சென்றுவிட்டால், அங்கு அனைவரும் சமம்தான். நாங்கள் இணைந்துதான் தொழுகை நடத்துவோம். சாஜி எங்களை அப்படித்தான் நடத்துவார்’ என இந்தியாவைச் சேர்ந்த வஜாஸ் அப்துல் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.