ரயில்களைப் போல, ட்ரக்குகளுக்கும் தனி மின் இணைப்பு... ஜெர்மனியின் புதிய எலெக்ட்ரிக் ஹைவே! | Germany opens the first electric highway

வெளியிடப்பட்ட நேரம்: 13:33 (10/05/2019)

கடைசி தொடர்பு:13:33 (10/05/2019)

ரயில்களைப் போல, ட்ரக்குகளுக்கும் தனி மின் இணைப்பு... ஜெர்மனியின் புதிய எலெக்ட்ரிக் ஹைவே!

மின்கம்பங்கள் கொடுக்கப்பட்டுள்ள இந்தச் சாலையில், ஹைபிரிட் ட்ரக்குகள் சாதாரண வாகனங்களைப் போல பயணிக்க முடியும்.

ரயில்களைப் போல, ட்ரக்குகளுக்கும் தனி மின் இணைப்பு... ஜெர்மனியின் புதிய எலெக்ட்ரிக் ஹைவே!

ஜெர்மனியில் முதல்முறையாக `எலெக்ட்ரிக் ஹைவே' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்பாதையில் இருக்கும் மின்கம்பங்கள் சாலைக்கு இடம்பெயர்ந்து விட்டதைப் போல தோன்றும் இவற்றின் மூலமாக, டிரக்குகள் மின்சாரத்தைப் பயன்படுத்தி சாலையில் பயணம் செய்யமுடியும். சோதனை முயற்சியாக பொதுப்போக்குவரத்துச் சாலையில் இது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 

90 கி.மீ வேகத்தில் செல்லும் ஹைபிரிட் டிரக்குகள்

எலக்ட்ரிக் ஹைவே ஜெர்மனி

சீமன்ஸ் (Siemens) என்ற ஜெர்மனி நிறுவனம்தான் இந்த டிரக்குகளில் இருக்கும் தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளது. டிரக்கின் முன்பக்கமாக மேல்பக்கத்தில் ஓர் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட மின்சார ரயில் இன்ஜினில் இருப்பதைப் போன்றுதான் இருக்கிறது. மேலும் சாலையில் ஓரத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளன. அவற்றின் இணைக்கப்பட்டுள்ள மின்கம்பிகள் மூலமாக மின்சாரம் டிரக்குகளுக்குக் கொடுக்கப்படும். டிரக்கின் மேற்பகுதியில் இருக்கும் அமைப்பானது இதைத் தொடும் போது மின்சாரம் டிரக்குக்கு மாற்றப்படும். தற்போது ஜெர்மனியின் பிராங்ஃபர்ட் விமானநிலையத்துக்கும் அதன் அருகே இருக்கும் தொழில் பூங்கா ஒன்றுக்கும் இடையே இந்த இ-சாலைப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 10 கி.மீ தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாதையானது ஜெர்மனியில் முதல்முறையாக பொதுப்போக்குவரத்துச் சாலையில் திறக்கப்பட்டுள்ளது. மேலும் இதேபோல இரண்டு, நெடுஞ்சாலைப் பகுதிகளில் கூடிய விரைவில் பயன்பாட்டுக்கு வரவிருக்கின்றன.

டிரக்

இந்தப் பகுதிகளில் அதற்கென வடிவமைக்கப்பட்ட டிரக்குகள் அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ வேகத்தில் பயணிக்க முடியும். இந்த டிரக்குகள் முழுவதும் மின்சாரத்தில் இயக்குவதில்லை, இவை ஹைபிரிட் வகை டிரக்குகள்தான். அதனால் சாதாரண சாலையிலும் பயணிக்கும் திறனைக் கொண்டவை. மின்சார டிரக்கினுள்ளே வரும்போது, இருக்கும் மோட்டார் மூலமாக இயங்கும் இவை, கூடுதலாக உள்ளே இருக்கும் பேட்டரியையும் சார்ஜ் செய்து கொள்கின்றன. டிரக்கில் பொருத்தப்பட்டுள்ள சென்ஸார் மின்சாரக் கம்பிகளை உணர்ந்து அதற்கேற்றவாறு கம்பியைத் தொடும் அமைப்பை இயக்கும். எனவே டிரக்கை ஓட்டுபவர் அதைப் பற்றிய கவலையின்றி இருக்கலாம். இந்தச் சாலையின் மூலமாக எரிபொருள் சிக்கனம் அதிகமாக இருக்கும் என்பதோடு மட்டுமன்றி இது சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பானது எனத் தெரிவிக்கிறது இந்தத் தொழில்நுட்பத்தை வடிவமைத்த சீமன்ஸ் நிறுவனம். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தீவிரமாக ஈடுபாடு காட்டிவரும் ஜெர்மனி அரசு 70 மில்லியன் யூரோக்களை இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்காகக் கொடுத்திருக்கிறது. 

எதிர்காலத்தில் நெடுஞ்சாலைகள் இப்படித்தான் இருக்குமா?

சீமன்ஸ் (Siemens)

உலகம் முழுவதும் உள்நாட்டு சரக்குப் போக்குவரத்து என்பது பெரும்பாலும் கனரக வாகனங்கள் மூலமாகவே நடைபெறுகிறது. மக்கள் தொகைக்கு ஏற்ப அவற்றின் தேவையும் அதிகரித்து வருகிறது. அதே சமயத்தில் டிரக்குகள் தொடங்கி பல வகையான கனரக வாகனங்களுக்குப் பெரும்பாலும் எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருவது டீசல்தான். ஆனால் அதற்கான தேவை அதிகரிக்கும் அளவுக்கு நம்மிடம் புதைபடிம எரிபொருள் கையிருப்பில் இருக்குமா என்றால் அது சந்தேகம்தான். உலகில் இருக்கும் புதைபடிம எரிபொருள்கள் அதிகபட்சமாக இன்னும் நூறு வருடங்களுக்கு வேண்டுமானால் நமக்கு ஆற்றலைத் தரலாம். எனவே அதற்கு மாற்றாக வேறு ஆற்றல் மூலங்களைக் கண்டறிவது நமக்கு அவசியமாகிறது. அதுமட்டுமன்றி வாகனங்களை இயக்கவும் மாற்று எரிபொருள்களைக் கண்டுபிடித்தாக வேண்டும். மாற்று எரிபொருள் என்று வரும்போது அதற்கு மாற்றாக மின்சார வாகனங்களைத்தான் பலரும் அடையாளம் காட்டுகிறார்கள். ஆனால் அதில் சில சிக்கல்களும் இருக்கவே செய்கின்றன. குறிப்பாக வேகமாக சார்ஜ் தீர்ந்து போகும் சிக்கல், அதை இது போன்ற மின்சாரப் பாதைகள் ஓரளவுக்குத் தீர்த்து வைக்கலாம். எரிபொருள் பற்றாக்குறை ஒருபுறம் இருக்க மற்றொரு டிரக்குகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளும் இங்கே இருக்கின்றன.

டிரக்

பெட்ரோல் வாகனங்களுடன் ஒப்பிடும் போது டீசல் வாகனங்கள் அதிகச் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அவற்றை இது போன்ற புதிய முயற்சிகள் குறைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும் இதுபோன்ற பொதுவான அமைப்பைப் பயன்படுத்துவதால் எரிபொருளும் குறைவாகவே செலவாகும். சாலையில் மின்கம்பிகளை பயன்படுத்தி இயக்கப்படும் வாகனங்கள் ஒன்றும் உலகுக்குப் புதிதானவை அல்ல. பல வருடங்களுக்கு முன்னரே அறிமுகப்படுத்தப்பட்ட டிராம் வண்டிகள் இது போலத்தான் சாலையில் மின் கம்பிகளைப் பயன்படுத்தின. ஜெர்மனியின் மின்சார நெடுஞ்சாலையைப் பார்க்கும் போது அப்படித் தோன்றலாம். ஆனால் சாலையில் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் இடம் மாறிப் பயணிக்க முடியும் என்பது இதன் சிறப்பாக இருக்கிறது. இது வரவேற்பைப் பெற்றால் எதிர்காலத்தில் உலகம் முழுவதும் இது போன்ற சாலைகள் பயன்பாட்டுக்கு வரக்கூடும்.


டிரெண்டிங் @ விகடன்