`ஆறு நாள்கள் அரசுவேலை; ஒரு நாள் மருத்துவர்!'- ஆச்சர்யப்பட வைக்கும் ஒரு நாட்டின் பிரதமர் | Bhutan Prime Minister did surgery on Every Saturday

வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (10/05/2019)

கடைசி தொடர்பு:14:05 (10/05/2019)

`ஆறு நாள்கள் அரசுவேலை; ஒரு நாள் மருத்துவர்!'- ஆச்சர்யப்பட வைக்கும் ஒரு நாட்டின் பிரதமர்

தெற்கு ஆசியாவின் இமயமலை பகுதியில் அமைந்துள்ளது பூடான். இது மிக சிறிய நாடு என்றாலும் உலக அளவில் அனைத்து நாடுகளுடன் தொடர்பில் இருக்கும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது. அந்நாட்டு மக்கள் இன்னும் கலாசாரம் மாறாமல் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2018-ம் ஆண்டு முதல் அங்கு பிரதமராக பதவி வகித்து வருகிறார் லோதே ஷெரிங்.

பிரதமர் ஷெரிங்

லோதே ஷெரின் பிரதமர் மட்டுமல்லாது மருத்துவராக இருந்து வருகிறார். வாரத்தில் ஆறு நாள்கள் அரசுத் தொடர்பான வேலைகளைக் கவனிக்கும் அவர் வார இறுதியில் சனிக்கிழமையானால் அந்நாட்டில் உள்ள தேசிய மருத்துவமனையில் மருத்துவராக வேலை செய்துவருகிறார். மங்கிப்போன ஒரு வெள்ளைக் கோட்டுடன் சனிக்கிழமைகளில் அந்த மருத்துவமனை முழுவதும் உலாவந்து நோயாளிகளைக் கவனித்துக்கொள்கிறார். அங்கு அவருக்கு யாரும் பாதுகாப்புகள் வழங்குவதில்லை. சாதாரண ஒரு குடிமகனைப் போலவே உள்ளார். நோயாளிகளும் மிகவும் எளிதாக அவரைக் கடந்து செல்கின்றனர். 

 ஷெரிங்

இது பற்றி அவர் பேசும் போது, ``நான் மருத்துவராக வேலை செய்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தங்களின் மன அழுத்தத்தைப் போக்கிக்கொள்வதற்காக சிலர் மைதானத்தில் விளையாடுவர், சிலர் பாடல்கள் கேட்பர், சிலர் சுற்றுலா செல்வார்கள். ஆனால் எனக்கு அறுவை சிகிச்சை செய்து மருத்துவராக நோயாளிகளைக் கவனித்தால் மன அழுத்தம் நீங்கிவிடும்’ எனத் தெரிவித்துள்ளார்.

பூடான் பிரதமர் ஷெரிங் அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னதாக வங்கதேசம், ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்று மருத்துவராகப் பயிற்சி பெற்றவர். 2013-ம் ஆண்டு அரசியலுக்கு வந்த பிறகு அவர் இருந்த கட்சி தோற்றுவிட்டது. இருந்தாலும் பூடான் மன்னர், ஷெரிங்கை அழைத்து அவர் தலைமையில் ஒரு மருத்துவக் குழுவை அமைத்து நாட்டில் உள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் சென்று இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் படி அனுப்பிவைத்தார். ஷெரிங் தேர்தலில் போட்டியிடும் போது தேர்தல் உறுதி மொழியாக மருத்துவத்தை சிறந்து விளங்கச் செய்வேன் எனக் கூறியிருந்தார். 

 ஷெரிங்

தற்போது பிரதமரான பிறகு ஆறு நாள்கள் அரசு வேலைகளிலும், ஒரு நாள் மருத்துவராகவும் தன் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். மேலும் வியாழக்கிழமைகள் தோறும் அதே தேசிய மருத்துவமனையில் புதிய மருத்துவர்களுக்கு, அதிகாரிகளுக்கும் பயிற்சி அளித்து வருகிறார். 

 `நான் மருத்துவமனையில் நோயாளின் உடலை ஸ்கேன் செய்து அதைச் சரி செய்வேன். அதேபோல் அரசியலில் நாட்டின் நிலையைச் சரி செய்து நிச்சயம் அதைச் சரி செய்வேன். சாகும் வரையில் நான் பிறருக்கு சிகிச்சை அளிப்பேன்’ என பூடான் பிரதமர் லோதே ஷெரிங் கூறியுள்ளார். அவரின் செயல் அந்நாட்டு மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.