`தியாகம் செய்த அம்மா, மகிழ்ச்சியில் குதித்த மகன்!'‍ அமெரிக்காவில் நடந்த ஒரு நெகிழ்ச்சி சம்பவம் | Both Mom and son got excited in US

வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (10/05/2019)

கடைசி தொடர்பு:16:10 (10/05/2019)

`தியாகம் செய்த அம்மா, மகிழ்ச்சியில் குதித்த மகன்!'‍ அமெரிக்காவில் நடந்த ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

அம்மாக்கள் எப்போதுமே ஸ்பெஷல்தான். தன் குழந்தைகளுக்காகப் பல்வேறு தியாகங்களை எந்த வருத்தமும் இல்லாமல் மன நிறைவோடும் செய்பவர்கள். இப்படிப்பட்ட  ஒரு அம்மாவுக்கு இரு பல்கலைக்கழகங்கள் இணைந்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.

அம்மா மகன்

Photo: Central michigan University

ஆம், அமெரிக்காவின் மிச்சிகனில் வசித்து வருபவர் ஷரோண்டா வில்சன். இவர் ஃபெர்ரீஸ் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்துள்ளார். இவரின் மகன் ஸ்டீபன் மத்திய மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார். 

இரண்டு பல்கலைக்கழகமும் ஒரே நாளில் பட்டமளிப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்ய இருவரும் குழம்பிப் போயினர். எனினும் வில்சன் தன் மகனின் விழாதான் முக்கியம் என அங்கு செல்ல முடிவு செய்தார். இருவரும் காலையில் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள மத்திய மிச்சிகன் பல்கலைக்கழகம் வந்தனர். 

வில்சன் பட்டம் பெற வரவில்லை என்ற தகவல் அவரது ஃபேஸ்புக் பதிவு மூலம் ஃபெர்ரீஸ் ஸ்டேட் பல்கலைக்கழகத்துக்கு தெரிய வந்தது. அதன் காரணமும் தெரிய வர, இந்த விஷயத்தை உடனடியாகப் பல்கலைக்கழகத் தலைவருக்குக் கொண்டு சென்றனர். அவர் உடனடியாக மத்திய மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் இயக்குநரைத் தொடர்புகொண்டு விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். ஆனால், இந்த விஷயம் எதுவும் தெரியாமல் மகன் பட்டம் பெறுவதைப் பார்க்க பெருமிதத்துடன் அமர்ந்திருந்தார் ஷரோண்டா வில்சன். 

பட்டமளிப்பு விழா

Photo: Central michigan University

அப்போதுதான் அந்த சர்ப்ரைஸ் நடந்தது. ஷரோண்டா வில்சனனுக்கு பட்டமளிப்பு விழாவில் அளிக்கப்படும் தொப்பியை வழங்கினர் மத்திய மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் நிர்வாகிகள். அப்போது பேசிய மத்திய மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் தலைவர் பாப் டேவிஸ், ``எனக்கு இன்று காலையில் ஒரு அழைப்பு வந்தது. அது டேவிட் எய்ஸ்லர், ஃபெர்ரீஸ் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் தலைவர். அதனால் எல்லோரும் கொஞ்சம் நான் சொல்வதைக் கேளுங்கள்” என்றார். 

அரங்கமே அமைதியாகக் கவனிக்க மகன் ஸ்டீபன் மகிழ்ச்சியில் குதிக்கிறார். 

மேற்கொண்டு பேசிய பாப் டேவிஸ், ``ஃபெர்ரீஸ் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் சார்பாக வில்சனின் பட்டத்தை நாங்கள் வழங்க எங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது” எனக் கூறியதோடு, ஷரோண்டா வில்சன் பட்டமளிப்புக்கான சிறப்புகள் செய்யப்பட்டன. இந்தச் சம்பவம் அங்கு இருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அனைவரும் எழுந்து நின்று ஆரவாரம் செய்தனர். 

மகிழ்ச்சி

Photo: Central michigan University

இது தொடர்பாகப் பேசிய ஸ்டீபன், ``என் அம்மா என்னுடன் நின்று பட்டம் பெற்றதை விவரிக்க வார்த்தையே இல்லை. அவர் உண்மையிலே உறுதிமிக்க பெண்மணி. அவருடன் நான் இருந்த நிமிடங்களில் இதுதான் பெஸ்ட்” என்றார்.  இது தொடர்பாகப் பேசிய ஃபெர்ரீஸ் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர், ``இந்தச் சம்பவம் மிக மிக விரைவாக நடைபெற்றது” என்றார். 

இந்தக் காட்சிகள் மத்திய மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியாக செம வைரலானது.