உணவில்லாமல் தவிக்கப் போகும் 10 லட்சம் மக்கள்! - ‘மனிதாபிமான பேரழிவு’ என எச்சரிக்கும் ஐ.நா #Gaza | 1 million people could go hungry in gaza UN says

வெளியிடப்பட்ட நேரம்: 09:10 (11/05/2019)

கடைசி தொடர்பு:09:10 (11/05/2019)

உணவில்லாமல் தவிக்கப் போகும் 10 லட்சம் மக்கள்! - ‘மனிதாபிமான பேரழிவு’ என எச்சரிக்கும் ஐ.நா #Gaza

காஸா... அன்றாடம் நாம் படிக்கும் உலகச் செய்திகளில் இந்த பெயர் இல்லாமல் இருக்காது. இஸ்ரேலின் எல்லையில் உள்ள இந்த நகரில் எப்போதும் துப்பாக்கி சத்தங்களும், குண்டு சத்தங்களும் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கும். காஸாவில் உள்ள ஹமாஸ் என்ற தீவிரவாத குழுவுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. 2014-ம் ஆண்டு தொடங்கிய இந்த போர் தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுகின்றனர். சமீப காலமாக இந்த போர் உச்சத்தை எட்டியுள்ளது என்றே கூற வேண்டும். 

காஸா

இந்த போர் தொடர்ந்தால், காஸா ‘மனிதாபிமான பேரழிவை’ சந்திக்க நேரிடும் என ஐ.நா எச்சரித்துள்ளது. அங்குள்ள பத்து லட்சம் மக்கள் பசியினால் தவிக்க நேரிடும் எனவும்  தெரிவித்துள்ளது. ஒருபுறம் காஸா எல்லைப் பகுதியில் நடக்கும் போரில் பல ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தாலும் மற்றொரு புறம் அந்நாட்டில் நிலவும் நிதி நெருக்கடியாலும் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்து வருகின்றனர். இதுவரை பசியின்மை கொடுமையால் மட்டும் அங்கு 2000 பேர் உயிரிழந்துள்ளனர்.

போரில் சிதைத்த நகரம்

காஸாவில் உள்ள ஐம்பது லட்சம் மக்களுக்குத் தேவையான பள்ளிக்கூடம், மருத்துவம், உணவு, பொருளாதாரம் ஆகியவற்றைச் சரிசெய்ய ஆண்டுக்கு 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுகிறது. ஆனால் அங்குள்ள ஐ.நாவின் பாலஸ்தீன அகதி நிறுவனத்தின் பட்ஜெட் இன்னும் ஒரு மாதத்தில் தீரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வருடமே இந்த நிலை ஏற்படவிருந்தது ஆனால் ஐரோப்பா, வளைகுடா நாடுகள், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து நிதியை மிகவும் மன்றாடி வாங்கி இந்த ஒரு வருடத்தை ஓட்டியுள்ளது பாலஸ்தீன நிறுவனம். உலகம் முழுவதும் வழங்கப்பட்ட நிதிகளில் மிகவும் பெரியதாக  இது கருதப்படுகிறது. 

நிதி இல்லாமல் காஸா மக்கள் வாழமுடியாது.  அங்குள்ள 20 லட்சம் மக்கள் 40 கிலோ மீட்டர் தொலைவுக்குச் சென்று உணவுத் தேடும் சூழ்நிலை உருவாகும். பழைய நிதியை விட தற்போது இன்னும் அதிகமான நிதி இருந்தால் மட்டுமே காஸாவில் பாதி மக்களுக்காவது உணவு அளிக்க முடியும் என என பாலஸ்தீன நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காஸா தற்போது மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். 

பசியில் தவிக்கும்

இது பற்றி பேசிய பாலஸ்தீன நிறுவனத்தின் இயக்குநர் எலிசபெத் கேம்பெல், “ தற்போது எங்களிடம் உள்ள நிதிக்கு காஸாவில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களையும் மூடிவிட்டு, மக்கள் எந்த சுகாதார நிலையங்களும் செல்லாமல் அவர்களின் வேலையைப் பறித்தால் மட்டுமே ஓரளவு நிலைமையைச் சரிசெய்ய முடியும். இங்கு மட்டும்தான் மிகவும் விரைவில்  ‘மனிதாபிமான பேரழிவு ‘ நகரின் எல்லை வரை பரவும். மக்கள் தேவைக்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்ய முடியாதது குறித்து நாங்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.