`இனம் அழிந்துபோகுது, கொன்றவர்களை விடமாட்டோம்!'- ராஜாளிக்காகக் கொந்தளிக்கும் இஸ்ரேல் | Eight vultures killed with poisoning in Israel

வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (11/05/2019)

கடைசி தொடர்பு:13:05 (11/05/2019)

`இனம் அழிந்துபோகுது, கொன்றவர்களை விடமாட்டோம்!'- ராஜாளிக்காகக் கொந்தளிக்கும் இஸ்ரேல்

பறவைகளிலேயே பெரும் மாமிச உண்ணியாக இருப்பது, ராஜாளி கழுகுகள்தான். வானில் பறந்துகொண்டே தரையில் கிடக்கும் இரைகளைத் தன் கூரிய பார்வையால், மிகத் துல்லியமாகக் கண்டறிந்து, கண நேரத்தில் தாக்கும் வல்லமைகொண்டது.  மேலும், நிலத்தில் இறந்துகிடக்கும் உயிரினங்களையும், அவற்றின் அழுகும் இறைச்சித் துர்நாற்றத்தை எளிதாக மோப்பம்பிடித்து எங்கிருந்தாலும் அந்த இடத்துக்கு வந்துவிடும்

கழுகு

இப்படிப்பட்ட பல வகையான ராஜாளி கழுகுகள், உலகிலேயே இஸ்ரேலில் மட்டும்தான் அதிகம் வாழ்கின்றன. இந்நிலையில், இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் பகுதியான கோலன் ஹைட்ஸில், நேற்று காலை எட்டுக் கழுகுகள் இறந்துகிடந்துள்ளதாக அந்நாட்டு இயற்கை மற்றும் பூங்காக்கள் ஆணையம் தெரிவித்துள்ளது. இது, அப்பகுதியில் உள்ள மொத்த கழுகுகளின் எண்ணிக்கையில் பாதி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இறந்தக் கழுகுகள் அனைத்தும், விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளதாக, அந்நாட்டு நிர்வாகம் கூறியுள்ளது. இவற்றுடன் ஒரு நரியும், ஒரு குள்ளநரியும் கொல்லப்பட்டுள்ளது.  எதற்காக இவற்றுக்கு விஷம் வைக்கப்பட்டன... யார் செய்தது, எப்படிப்பட்ட விஷம் இதற்கு வைக்கப்பட்டது போன்ற தகவலும் இதுவரை தெரியவில்லை. இறந்த எட்டுக் கழுகுகள் இல்லாமல் மேலும் இரண்டு கழுகுகளும் கவலைக்கிடமான நிலையில் அந்நாட்டு விலங்குகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் கழுகுகள்

இதுபற்றி பேசிய அந்நாட்டு இயற்கை மற்றும் பூங்காக்கள் ஆணையத்தின் அதிகாரி, “இது கழுகுகள்மீது நடத்தப்பட்ட கொடுமையான தாக்குதல். இதனால், அவற்றின் இனம் அழிந்துபோகும். இந்தச் செயலைச் செய்தது யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்த வேண்டும் என அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார். முந்தைய காலங்களில் வாழ்ந்த விவசாயிகள்,  தங்கள் நிலத்தையும் குடியிருப்புப் பகுதிகளையும் சேதப்படுத்தும் விலங்குகளையும், பறவைகளையும் விஷம் வைத்துக் கொன்றனர். அதேபோன்ற சம்பவம் தற்போதும் நடைபெற்றிருக்குமா என்ற கோணத்தில் இஸ்ரேல் அதிகாரிகள் தங்களின் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

1980-ம் ஆண்டுகளில், இஸ்ரேல் பகுதியில் கணக்கிடமுடியாத அளவுக்கு கழுகுகள் வாழ்ந்துவந்துள்ளன. ஆனால், அதன் பிறகு அவை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து 1998-ம் ஆண்டு வரை 130 கழுகுகள் இருந்துள்ளன. இதுவும் குறைந்து, தற்போது 20 ராஜாளி கழுகுகள் வாழ்ந்துவந்த நிலையில், அவற்றிற்கு விஷம் வைக்கப்பட்டது, அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கழுகுகளின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க இஸ்ரேல் அரசு பல்வேறு முயற்சிகள் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.