`60 வருட தேடல்; அப்படியொரு மகிழ்ச்சி!'- 104 வயது தாயைக் கண்டுபிடித்த 80 வயது மகள் | Irish pensioner 81 grew orphanage meets 103 year old mother

வெளியிடப்பட்ட நேரம்: 14:08 (11/05/2019)

கடைசி தொடர்பு:14:08 (11/05/2019)

`60 வருட தேடல்; அப்படியொரு மகிழ்ச்சி!'- 104 வயது தாயைக் கண்டுபிடித்த 80 வயது மகள்

 அறுபது வருட தேடல் அது. தன் தாயைக் கண்டுபிடித்த மகிழ்ச்சியில் இருக்கிறார், ஈலியன் மெக்கன். என்ன நடந்தது... எப்படி அவர் சந்தித்தார் என்பதுதான் சுவாரஸ்யம். 

தாயுடன் ஈலியன்

அயர்லாந்து டப்ளினில் உள்ள பிதேனி காப்பகத்தில் வளர்ந்தவர், ஈலியன் மெக்கன். தன் தாய் யார், அவர் எங்கே இருக்கிறார் என்ற எந்தத் தகவலும்  தெரியாமல் வளர்ந்தவர். காரணம், சிறுவயதாக இருக்கும்போது, ஈலியனின் தாய் எலிசபத் அவரை இந்த காப்பகத்தில் சேர்த்துவிட்டார். அவருக்கு தன் தாயின் பெயர் எலிசபத் என்பது மட்டுமே தெரியும். தாயைக்காணும் ஆர்வம் அவரது 19-வது வயதில் தொடங்கியுள்ளது. ஏறக்குறைய 60 ஆண்டுகாலம் தேடத்தொடங்கியுள்ளார்.

சிறுவயதில்

ஆனால், இவ்வளவு நாள்கள் அவர் மன உறுதியுடன் தேடியுள்ளார். அப்படியான தேடலுக்கு அன்று விடை கிடைத்தது. அயர்லாந்தில் நடக்கும் ஆர்டிஇ ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், `தான் நீண்ட நாள்களாகத் தன் தாயைத் தேடிக்கொண்டிருக்கிறேன்’ எனத் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, சிலருடைய உதவிகள்மூலம் அவர் நினைத்தது நடந்துவிட்டது. 

ஆம். தன் தாயை அவர் கண்டுபிடித்துவிட்டார். 60 ஆண்டுகளாக தவம் நிறைவேறிவிட்டது. ஸ்காட்லாந்தில் இருக்கும் தாயின் வீட்டுக்கு வெளியே நின்றுகொண்டிருக்கிறார். அவருக்கு வயது 80. தள்ளாத வயதில், முதுமையுடன் நடுங்கும் விரல்களுடன் கதவைத் தட்டுகிறார். கதவு திறக்கப்பட்டது. திறந்தவர் அவரது சகோதரர். தன் அம்மாவைப் பார்க்க வேண்டும் என்று கூறி உள்ளே செல்கிறார் ஈலியன். அவரது தாய் எலிசபத்துக்கு 103 வயது. எதுவும் பேசாமல் அமைதியுடன் அவர் அருகில் சென்று அமர்கிறார் ஈலியன். 

ஈலியன்

``எனக்குத் தெரியும் அவர்தான் என் தாய் என்று. அவரிடம், `நான் தான் உங்களுடைய மகள்’ என்றேன்” உடனே அவர் என்னைப் பார்த்தார். பின்பு என் கையைப் பற்றிக்கொண்டார். `அப்படியோரு பிணைப்பு எங்களுக்குள் இருந்தது” என்று விவரிக்கிறார் ஈலியன். ``இப்படியொரு நெகிழ்வான தருணத்தை நான் எதிர்கொண்டதில்லை.  ஏதாவது ஒரு மலைக்கு மேல் நின்றுகொண்டு கத்த வேண்டும் போல் தோன்றியது” என்றார். என் மகளிடம்,  ``என் வாழ்க்கை முழுவதும் யாரென்றே தெரியாமல் இந்த பெண்ணின்மீது அன்பு செலுத்திக்கொண்டிருந்தேன் ” என்று கூறுவேன்.  

தாயைக் கண்டுபிடித்ததுகுறித்து பவர் பேசுகையில், ``நான் ரேடியோவில் பேசியதையடுத்து, பரம்பரையியல் வல்லுநர் (genealogist) எனக்கு போன் போட்டு, என் தாயைக் கண்டுபிடித்துவிட்டதாக கூறினார். என்னால் நம்பவேமுடியவில்லை. மகிழ்ச்சியில் திளைத்தேன். என் கணவர், மகளுடன் வீட்டுக்குச் சென்றேன். அவர் என்னை ஏற்றுக்கொண்டார். அம்மா அழகாக இருக்கிறார்” என்றார்.