`இரவில் சாண்ட்விட்ச், சிப்ஸ்.... காலையில் மரணம்!' - தேனிலவில் இந்திய வம்சாவளிப் பெண்ணுக்கு நேர்ந்த கதி | A NEWLYWED whose wife died on their honeymoon in Sri Lanka

வெளியிடப்பட்ட நேரம்: 17:38 (12/05/2019)

கடைசி தொடர்பு:19:15 (13/05/2019)

`இரவில் சாண்ட்விட்ச், சிப்ஸ்.... காலையில் மரணம்!' - தேனிலவில் இந்திய வம்சாவளிப் பெண்ணுக்கு நேர்ந்த கதி

தேனிலவுக்காக இலங்கை சென்ற இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

தேனிலவு பயணத்தில் சந்தாரியா - உஷிலா படேல்

லண்டன் நகரைச் சேர்ந்தவர் கிளன் சந்தாரியா. 33 வயதாகும் இவர் வடக்கு லண்டனில் உள்ள பின்ச்லே பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கும் இதே பகுதியில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண்ணான உஷிலா படேல் என்பவருக்கும் கடந்த மாதம் 19-ம் தேதி திருமணம் நடைபெற்றது. மூன்று வருடங்களாகக் காதலித்தவர்கள் கடந்த மாதம் நடந்த திருமணத்தைக் கொண்டாடும் வகையில் இரண்டு நாள் தேனிலவுப் பயணமாக இலங்கையின் காலே பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த அவர்கள் தேனிலவைக் கொண்டாடி வந்துள்ளனர். இலங்கைப் பயணத்தை முடித்துக்கொண்டு இருவரும் மாலத்தீவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்துள்ளனர்.

சந்தாரியா - உஷிலா படேல்

இதற்கிடையே, கடந்த ஏப்ரல் 25-ம் தேதி நட்சத்திர ஹோட்டலில் உணவருந்திய தம்பதி இருவரும் அங்கேயே மயங்கி விழுந்துள்ளனர். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் மணப்பெண் உஷிலா உயிரிழந்துள்ளார். அதேபோல் சந்தாரியாவுக்கு உடல்நிலை வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்த மரணத்துக்கு ஹோட்டலில் கொடுத்த உணவே காரணம் என சந்தாரியா குற்றம் சாட்டியுள்ளார். இவர்களது உறவினர்களும் ஹோட்டலில் கொடுத்த உணவு புட் பாய்சன் ஆனதால் உயிரிழந்துள்ளார் எனக் குற்றம் சுமத்தியுள்ளனர். ஆனால் இவர்கள் சாண்ட்விட்ச், சிப்ஸ் சாப்பிட்டனர். கூடவே வோட்கா மற்றும் கூல்ட்ரிங்ஸ் மட்டுமே குடித்தனர். அப்படி இருக்கையில் எங்கள் உணவு தரமானதாக இல்லை எனக் கூறுவதை ஏற்க முடியாது என ஹோட்டல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 சந்தாரியா - உஷிலா படேல்

இந்த விவாதங்களுக்கு மத்தியில் விசாரணை முடியும் வரை சந்தாரியா இலங்கை காவலில் இருக்க வேண்டும். அவரை லண்டனுக்கு அனுப்ப முடியாது என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. ஆனால், காதல் மனைவி இறந்த சோகத்தில் இருக்கும் சந்தாரியா, ``முதல் நாள் இரவில்தான் உணவு சாப்பிட்டோம். மறுநாள் காலையில் அவள் வாந்தி எடுக்க ஆரம்பித்துவிட்டாள். மூன்று பேர் எங்களை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், இப்போது அவள் என்னுடன் இல்லை என்றாலும் இரவில் நட்சத்திரங்களைப் பார்க்கும் போதெல்லாம் உஷிலா உடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். அவள் வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருப்பாள். இங்கு இருக்கும் அதிகாரிகள் என்னை ஒரு குற்றவாளியாக நடத்துவதில்லை. என்றாலும் என்னைப்  பாதிக்கப்பட்டவனைப்போலும் நடத்துவதில்லை. .

சந்தாரியா - உஷிலா படேல்

இந்த உலகம் முழுவதும் எனக்கு எதிராக இருப்பதுபோல் உணர்கிறேன். இருந்தாலும் அவளை விட்டு வரப்போவதில்லை" எனச் சோகத்துடன் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் சந்தாரியாவுக்கு ஆதரவாக இருக்கப்போவதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ள நிலையில், உஷிலாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், உடல் வறட்சி மற்றும் வாந்தியின் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இந்த விவகாரம் மர்மம் நிறைந்ததாகவே உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க