`ரொட்டியும் பாலும் எங்களுக்கு ஆடம்பரம்தான்’ - நிகழ்கால நரகத்தில் வாழும் ஏமன் குழந்தைகள் | A child dies from hunger every 12 minutes in yemen

வெளியிடப்பட்ட நேரம்: 10:46 (13/05/2019)

கடைசி தொடர்பு:18:59 (13/05/2019)

`ரொட்டியும் பாலும் எங்களுக்கு ஆடம்பரம்தான்’ - நிகழ்கால நரகத்தில் வாழும் ஏமன் குழந்தைகள்

ஏமனில் நடக்கும் உள்நாட்டுப் போரின் விளைவாக 12 நிமிடத்துக்கு ஒரு குழந்தை பசியினால் உயிரிழந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏமன்

ஏமன் என்றாலே நம் கண்முன்னே முதலில் வருவது இடிந்த கட்டடங்களும், மெலிந்த உடலுடன் கூடிய குழந்தைகளும்தான். 21-ம் நூற்றாண்டின் மிகக் கொடூரமான போரைச் சந்தித்து வருகிறது ஏமன். இதனால் அங்கு பொருள்களின் விலை 63 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மேலும், அந்நாட்டின் ரியால் நாணயத்தின் மதிப்பு ஏறக்குறைய 180 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. 

போர் ஏன்?

ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சிப் படைகளுக்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையே நடைபெற்று வந்த போர் உச்சத்தை எட்டியது. ஏமனின் பல பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். இதனால், அந்நாட்டின் அதிபர் ஹாதி ஏமனை விட்டு வெளியேறும் சூழல் உருவானது. இதன்பின்னர் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய ஏழு அரபு நாடுகள் இணைந்து ஏமன் அரசை மீண்டும் நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டன. சவுதி அரேபியாவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்தது.

ஏமன் போர்

2015-ம் ஆண்டு சவுதிப் படைகள் ஏமனில் காலடி எடுத்து வைத்த பிறகுதான் அங்கு அதிக பஞ்சமும், பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டது. சவுதி கூட்டுப்படை ஹவுதி கிளர்ச்சிப்படைகளை நோக்கி வான்வழித்தாக்குதல் நடத்தின. கிளர்ச்சியாளர்களை முடக்கும் பொருட்டு சவுதிப் படைகள் முதற்கட்டமாகத் துறைமுகங்களை மூடின. ஏமன் மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் ஹோடைதா என்னும் மிகப்பெரிய துறைமுகம் வழியாகத்தான் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால், துறைமுகம் மூடப்பட்டதையடுத்து உணவுப் பொருள்களின் இறக்குமதி பெருமளவு சரிந்தது. முக்கியத்துவம் வாய்ந்த ஹோடைதா துறைமுகத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர சவுதி கூட்டுப்படைகளும் ஹவுதி கிளர்ச்சிப் படையும் அடித்துக்கொண்டன. அவர்களின் சண்டையால் உணவுப் பொருள்களின் இறக்குமதி முற்றிலும் முடங்கியது. உணவுப் பொருள்கள் தட்டுப்பாட்டால் ஏமன் மக்கள் பஞ்சத்தில் தவிக்கும் நிலை உருவானது

பசியில் தவிக்கும் சிறுவர்கள்

போரினால் ஏற்பட்ட பாதிப்பு

போர் தொடங்கிய காலத்தைவிட தற்போது பஞ்சம் அதிகளவில் தலைவிரித்தாடுகிறது. அந்நாட்டில் உள்ள 2.83 கோடி மக்கள் தொகையில் சுமார் 2.22 கோடி மக்கள், போரினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தீவிர உணவுப் பஞ்சத்தினால் 1.4 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏமன் நாட்டு வரலாற்றிலேயே அந்நாட்டு நாணயத்தின் மதிப்பு மிகக் குறைந்த மதிப்பை எட்டியுள்ளது.

சிதைந்த வீடுகள்

இது பற்றிப் பேசிய 83 வயதான ஃபஸா, ``இங்கு நடக்கும் போரினால் தினமும் பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். என் குடும்பம் இதுவரை உள்நாட்டிலேயே பல இடங்களில் குடிபெயர்ந்துவிட்டோம். எங்களுக்கு உணவு இல்லை, மிகவும் மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறோம். நாங்கள் பசியால் உயிரிழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். எங்கள் நாட்டில் இப்படி ஒரு போர் நடப்பதை என்னால் சற்றும் நம்பமுடியவில்லை. என்ன ஆனது இந்த நாட்டுக்கு. எங்கள் வாழ்வு அகதிகள் முகாமிலேயே முடிந்து விடும் என எண்ணிக்கூட பார்க்கவில்லை. 

உடல்மெலிந்த குழந்தை

இதற்கு முன்பும் வாழ்க்கை எங்களுக்கு எளிதாக இல்லை. ஆனால், உண்ணுவதற்கு சிறிது உணவாவது கிடைத்தது. ஆனால், தற்போது அதுவும் இல்லாமல் எங்கள் குழந்தைகள் செத்து மடிகின்றன. இங்குள்ள அனைவரும் தங்களின் எதிர்காலத்துடனும், உணவு தேவையுடன் தினம் தினம் போராடிக்கொண்டிருக்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரை ரொட்டித் துண்டுகளும், பாலும் ஆடம்பரமானவை. இறைச்சி போன்றவற்றை கண்ணில் பார்த்தாலே அது எங்களுக்குச் சொர்க்கம்’ எனத் தெரிவித்துள்ளார். 

 

 

ஏமன் குழந்தைகளின் நிலை பற்றி பேசியுள்ள யுனிசெஃப் இயக்குநர் கீர்ட் கேப்பிலர் (Geert Cappelaere), ``ஏமனில் உள்ள குழந்தைகளைப் பொறுத்தவரை அது வாழும் நரகம். நாம் 21-ம் நூற்றாண்டில் அனைத்து தொழில்நுட்பத்துடனும் வாழ்ந்துகொண்டிருக்கும் வேளையில் இவர்களின் நிலையைச் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏமனில் 12 நிமிடத்துக்கு ஒரு குழந்தை பசியின் கொடுமையால் இறந்து வருகிறது. ஒரு நாளுக்கு 100 மக்கள் புதைக்கப்படுகின்றனர். இந்தப் போரை தடுக்க அனைத்து நாடுகளும் முன் வரவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.