உலகின் ஆழமான பகுதியில் கிடந்த பிளாஸ்டிக்! - அதிர்ச்சியடையவைக்கும் மாசுபாடு | Plastic found in the deepest place on the earth

வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (14/05/2019)

கடைசி தொடர்பு:12:00 (14/05/2019)

உலகின் ஆழமான பகுதியில் கிடந்த பிளாஸ்டிக்! - அதிர்ச்சியடையவைக்கும் மாசுபாடு

கடல்

Photo Credit: Discovery/Five Deeps Expedition

ஒவ்வொரு நாளும் நாம் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் கழிவுகளால் பூமிக்கு ஏற்படும் பாதிப்பை உலகம் தற்போது உணரத் தொடங்கியிருக்கிறது. பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டைக் குறைக்க, தற்போது முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தாலும் ஏற்கெனவே சுற்றுப்புறத்தில் காணப்படும் கழிவுகளின் பாதிப்பைத் தடுக்க முடியாது. அதுபோன்ற பிளாஸ்டிக் கழிவுகள், உலகின் ஆழமான பகுதியைக்கூட விட்டுவைக்கவில்லை என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பசிபிக் பெருங்கடலில் காணப்படும் மரியானா ட்ரென்ச் எனப்படும் அகழியே, பூமியில் உள்ள மிகவும் ஆழமான பகுதியாக இருக்கிறது. இதன் ஆழம், சுமார் 11,000 மீட்டருக்கும் மேல் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. சுமார் 10 கிலோமீட்டருக்கும் மேல் அதிகமான ஆழம்கொண்ட இந்த அகழிக்குள் செல்வது அவ்வளவு சுலபமான காரியமில்லை. இதுவரை இரண்டு பேர் இதனுள்ளே சென்று வந்திருக்கிறார்கள். தற்போது, மூன்றாவது முறையாக அந்த முயற்சியை மேற்கொண்டு, அதில் வெற்றியும் அடைந்திருக்கிறார், விக்டர் வெஸ்காவோ (Victor Vescovo) என்பவர்.

விக்டர் வெஸ்காவோ (Victor Vescovo)

Photo Credit: Discovery/Five Deeps Expedition

ஓய்வுபெற்ற அமெரிக்க கடற்படை அதிகாரியான இவர், வடிவமைத்த சிறப்பு நீர்மூழ்கி அமைப்பின் மூலமாக  மரியானா அகழியில் 10,928 மீட்டர் ஆழம் வரை சென்றிருக்கிறார். இதன்மூலம், உலகின் ஆழமான பகுதிக்கு தனியாகச் சென்றுவந்த மனிதர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார். கடந்த 1-ம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்வு தொடர்பான தகவல்கள், தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அவ்வளவு ஆழமான பகுதியில் புதிய வகை கடல் உயிரினங்களைக் கண்டுபிடித்த அவர், அதைத் தவிர பிளாஸ்டிக் பொருள்கள் சிலவற்றையும் பார்த்திருக்கிறார். அந்தப் பொருள்கள், பிளாஸ்டிக் பை மற்றும் சாக்லேட் கவராவும் இருக்க வாய்ப்புள்ளதாக விக்டர் தெரிவித்திருக்கிறார்.

பிளாஸ்டிக் கழிவுகள்

Photo Credit: Discovery/Five Deeps Expedition

அதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் காணப்படும் உயிரினங்களைச் சேகரித்து, அவற்றில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருக்கிறதா என்பதைப் பரிசோதனை செய்யவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. கடலின் ஆழமான பகுதியைக்கூட விட்டுவைக்காத பிளாஸ்டிக் மாசுபாடு, உலகை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.