3 அமைப்புகளுக்கு நிரந்தரத் தடை!- இலங்கை அதிபர் சிறிசேனா அதிரடி | The Government of Sri Lanka banned 3 organisations including National Tahahid Jamaat.

வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (14/05/2019)

கடைசி தொடர்பு:12:25 (14/05/2019)

3 அமைப்புகளுக்கு நிரந்தரத் தடை!- இலங்கை அதிபர் சிறிசேனா அதிரடி

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குக் காரணமாக கூறப்படும் தேசிய தவ்ஹித் ஜமாத் உள்ளிட்ட 3 அமைப்புகளுக்குத் தடை விதித்துள்ளது அந்நாடு.

இலங்கை குண்டுவெடிப்புக்கு காரணமான தேசிய தவ்ஹித் ஜமாத்.
 

ஈஸ்டர் தினமான ஏப்ரல் 21-ம் தேதியன்று இலங்கையில் உள்ள தேவாலயங்கள் மற்றும் தனியார் தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் மனித வெடிகுண்டுகள் மூலம் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடத்தப்பட்டன. இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 30 பேர் உள்ளிட்ட சுமார் 250 பேர் பலியாகினர். இலங்கையில் நடந்த இந்தக் கொடூரத் தாக்குதல் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் இலங்கையில் செயல்படும் தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என இலங்கை அரசு தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில், ஐ.எஸ் அமைப்பு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது.

இதைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் ராணுவத்தினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்தச் சோதனையின்போது குண்டுவெடிப்புத் தாக்குதலில் தொடர்புடைய பலரும் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடமிருந்து ஆயுதங்கள், வெடிபொருள்கள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டன. இதனிடையே இலங்கையில் உள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான நிறுவனங்கள், கடைகள் மீது நேற்று திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா

இந்த நிலையில், இலங்கையில் வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராக ராணுவம் தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தும் என இலங்கை ராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். இதனிடையே, தேசிய தவ்ஹித் ஜமாத் மற்றும் ஜமாத்தே மில்லாதே இப்ராஹிம் (ஜே.எம்.ஐ), விலயாத் அஸ் ஜெய்லானி ஆகிய 3 அமைப்புகளையும் நிரந்தரமாகத் தடை செய்யப்பட்ட ஆணையை இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார். இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.