ஜூலியன் அசாஞ்சே மீதான பாலியல் வழக்கு! - மீண்டும் அதிரடி காட்டும் ஸ்வீடன் | Julian assange sexual abuse case

வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (14/05/2019)

கடைசி தொடர்பு:13:10 (14/05/2019)

ஜூலியன் அசாஞ்சே மீதான பாலியல் வழக்கு! - மீண்டும் அதிரடி காட்டும் ஸ்வீடன்

மெரிக்க அரசின் ராணுவ ரகசியங்கள் தொடர்பான ஆவணங்களை வெளியிட்டதன்மூலம் பிரபலமடைந்தவர், ஜூலியன் அசாஞ்சே. இவர், 'விக்கி லீக்ஸ்' என்ற இணையதளத்தைத் தொடங்கி, அதன்மூலம் பல்வேறு நாடுகளின்  ஆவணங்களை வெளியிட்டுவந்தார். கடந்த 2010ல், ஜூலியன் அசாஞ்சேவுக்கு எதிராக ஸ்வீடனைச் சார்ந்த இரண்டு பெண்கள் பாலியல் பலாத்கார வழக்கு மற்றும் பாலியல் அத்து மீறல் வழக்குகளைப் பதிவுசெய்தனர்.

ஜூலியன் அசாஞ்சே

இதைத்  தொடர்ந்து,  ஜூலியன் அசாஞ்சேவைக் கைதுசெய்யும்படி ஸ்வீடன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இவற்றை எதிர்த்து, இந்த வழக்கிலிருந்து தன்னை விடுதலைசெய்யும்படி நீதிமன்றத்தை நாடினார், ஜூலியன் அசாஞ்சே. ஆனால், நீதிமன்றம் அதை மறுத்து விட்டது. அமெரிக்காவுக்கு எதிரான ஆவணங்களை வெளியிட்டதால்,  ஸ்வீடன் தன்னை நாடு கடத்தத் திட்டமிடுகிறது எனக்கூறி வந்த  ஜூலியன் அசாஞ்சே, லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்தார். கடந்த 2017-ம் ஆண்டு, இந்த வழக்கை விசாரித்த ஸ்வீடன் நீதிமன்றம், அசாஞ்சே தலைமறைவு வாழ்வு வாழ்வதால் அவரை இந்த வழக்கிலிருந்து விடுதலைசெய்தது. அதே வேளை, 2020-க்குள் மீண்டும் அவர் ஸ்வீடனுக்குள் வந்தால், இந்த வழக்கு மீண்டும் உயிர்பெறும் என உத்தரவிட்டிருந்தது.

ஜூலியன் அசாஞ்சே

கடந்த ஏழு ஆண்டுகளாக லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தலைமறைவாக இருந்த அசாஞ்சே, சமீபத்தில் ஈக்வடார் தூதரகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், மீண்டும் அவர் மீதான பாலியல் வழக்கை விசாரணை செய்ய ஸ்வீடன் அரசு முடிவுசெய்துள்ளது. இதுகுறித்துப் பேசிய ஸ்வீடன் நாட்டின் பொது வழக்குப் பிரிவின் துணை இயக்குநர்  ஈவா மேரி பெர்சன் , “ ஜூலியன் ஆசாஞ்சே மீதான பாலியல் வழக்கை மீண்டும் விசாரிக்க ஸ்வீடன் அரசு முடிவெடுத்துள்ளது. இந்த வழக்கில், அவர் குற்றம் செய்திருப்பதற்கான முகாந்திரங்கள் இருக்கின்றன” என்று கூறியுள்ளார். இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள விக்கி லீக்ஸ் ஆசிரியர் கிறிஸ்டின் க்ராப்சன், “ ஸ்வீடன் அரசு மீண்டும் இந்த வழக்கைக் கையில் எடுத்துள்ளது, இது ஒரு வகையில் ஜூலியன் அசாஞ்சேவுக்கு நல்லதுதான். தான் குற்றமற்றவர்  என்பதை மீண்டும் நிரூபிக்க நல்லதொரு வாய்ப்பாக அமையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.