`ஹெட் ஆபீஸ்ல இருந்து அனுப்பிருக்காங்க!'- ஒரு வருஷமா கே.எஃப்.சி-க்கு அல்வா கொடுத்த மாணவர் | South African student arrested for cheating KFC employees

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (14/05/2019)

கடைசி தொடர்பு:18:00 (14/05/2019)

`ஹெட் ஆபீஸ்ல இருந்து அனுப்பிருக்காங்க!'- ஒரு வருஷமா கே.எஃப்.சி-க்கு அல்வா கொடுத்த மாணவர்

உணவின் சுவையை சோதிப்பதற்காக தலைமை அலுவலகத்திலிருந்து அனுப்பியிருப்பதாகக் கூறி கே.எஃப்.சி உணவகங்களில் ஒருவருடமாக இலவசமாக உணவு வகைகளை ருசித்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். 

கே.எஃப்.சி

தனியார் உணவகமான கே.எஃப்.சிக்கு உலகம் முழுவதும் கிளைகள் இருக்கின்றன. இந்த உணவகங்கள் தயாராகும் சிக்கனுக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இந்தநிலையில், தென்னாப்பிரிக்காவில் உள்ள பல்வேறு கே.எஃப்.சி உணவகங்களில் ஒருவருடமாக இலவசமாக உணவு வகைகளை ருசித்த மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். 

தென்னாப்பிரிக்காவில் உள்ள பல்வேறு கே.எஃப்.சி உணவகங்களுக்குச் செல்வதை டர்பனின் க்வாஜுலு நடால் (University of KwaZulu-Natal) என்ற பல்கலைக்கழக மாணவர் ஒருவர் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். ஒவ்வோர் உணவகத்துக்குச் செல்லும்போதும் அங்கிருக்கும் பணியாளரிடம், தான் தலைமையகத்திலிருந்து வருவதாகவும் தாங்கள் தயாரிக்கும் உணவின் தரம் குறித்து சோதிக்கவே தான் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார். ஆனால், அவர் கூறியதில் இருக்கும் உண்மைத் தன்மையைச் சோதிக்காமல் அவருக்கு உணவு வழங்கப்பட்டு வந்திருக்கிறது. 

இதுகுறித்து Xpouzar இணையதளத்துக்கு டர்பன் நகர கே.எஃப்.சி உணவக ஊழியர் ஒருவர் கொடுத்த பேட்டியில், ``ஒவ்வொரு முறை உணவகத்துக்கு அவர் வரும்போதும் நேரடியாக உணவுகள் தயாரிக்கும் இடத்துக்கு வந்து சோதனையிடுவார். உணவுகள் குறித்து குறிப்பெடுத்துக் கொள்ளும் அவர், தான் விரும்பிய உணவின் சுவை குறித்து அறிந்துகொள்வதற்காக அதை வாங்கிச் சுவைப்பது வழக்கம். 

கே.எஃப்.சி

தலைமை அலுவலகத்திலிருந்து கொடுத்ததாக ஓர் அடையாள அட்டையையும் அவர் எங்களிடம் காட்டினார். மிடுக்கான உடையுடன் வலம்வந்த அவரை சந்தேகிக்க எங்களுக்குத் தோன்றவில்லை. அதேபோல், எங்கள் ஊழியர்கள் பலருக்கும் அவர் பரிச்சயமானவராக இருந்தார். அநேகமாக அவர் ஏதாவது ஒரு கே.எஃப்.சி உணவகத்தில் முன்னர் பணிபுரிந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில் அவருக்கு உணவகத்தின் நடைமுறைகள் அனைத்தும் தெரிந்திருந்தது'' என்றார். 

டர்பன் நகரைச் சுற்றியுள்ள பல்வேறு கே.எஃப்.சி உணவகங்களுக்குச் செல்வதை வாடிக்கையாகக் கொண்ட அந்த மாணவர், ஓராண்டாக ஏறக்குறைய தினசரி இலவசமாக உணவுவகைகளை ருசிபார்த்து வந்திருக்கிறார். 27 வயதான அந்த மாணவர் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. அவரைக் கைது செய்துள்ள டர்பன் போலீஸார், நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தியிருக்கின்றனர். கென்யாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் டெடி யூஜின், இந்தத் தகவலை ட்விட்டரில் பகிரவே, அது வைரலாகி வருகிறது.