`இத லஞ்சமா வச்சுக்கோங்க' - நியூசிலாந்து பிரதமருக்கு 11 வயது சிறுமி எழுதிய சுவாரஸ்ய கடிதம்! | New Zealand PM Jacinda rejected a “bribe” offered from young

வெளியிடப்பட்ட நேரம்: 09:40 (15/05/2019)

கடைசி தொடர்பு:09:40 (15/05/2019)

`இத லஞ்சமா வச்சுக்கோங்க' - நியூசிலாந்து பிரதமருக்கு 11 வயது சிறுமி எழுதிய சுவாரஸ்ய கடிதம்!

டிராகன் ஆராய்ச்சி செய்ய வேண்டும் எனக் கூறி பிரதமருக்கு சிறுமி ஒருவர் லஞ்சம் அனுப்பியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடந்தது நமது பிரதமர் மோடிக்கு அல்ல. நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா அர்டர்னுக்கு.

நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா அர்டர்ன்

ஜெசிண்டா அர்டர்ன் அலுவலகத்துக்குச் சமீபத்தில் ஒரு கடிதம் வந்தது. விக்டோரியா என்னும் 11 வயது சிறுமி அனுப்பிய அந்தக் கடிதத்தில், ``தான் ஒரு டிராகன் பயிற்சியாளராக விரும்புவதாகவும், அதற்காக டெலிகைனடிக் எனப்படும் தொலை இயக்கவியல் அதிகாரம் வேண்டும். அரசாங்கம் டிராகன் ஆராய்ச்சி செய்ய வேண்டும்" என வலியுறுத்தியதோடு மட்டுமில்லாமல் இதற்கு லஞ்சமாக இந்திய மதிப்பில் 232 ரூபாயையும் சேர்த்து அனுப்பியிருந்தார். சிறுமியின் இந்த லஞ்சத்தைத் திருப்பி அனுப்பிய ஜெசிண்டா அவரின் கோரிக்கைக்குப் பதிலளித்துள்ளார். அதில், ``உளவியல் மற்றும் டிராகன் பற்றிய உங்கள் ஆலோசனைகளைக் கேட்க மிகவும் ஆர்வமாக இருக்கிறது. ஆனால், துரதிருஷ்டவசமாக இதுதொடர்பாக நாம் தற்போது எந்த ஆய்வும் செய்யவில்லை. அதனால் உங்கள் லஞ்சப் பணத்தை திருப்பி அனுப்புகிறேன். டிராகன் பற்றிய உங்களின் தேடலுக்கு எனது வாழ்த்துகள். இனி நானும் தொடர்ந்து டிராகன்கள் குறித்துக் கவனிக்கிறேன்" எனக் கூறியுள்ளார். 

ஜெசிண்டா அர்டர்ன்

சிறுமியின் இந்த ஆர்வம் குறித்துப் பேசிய அவரின் சகோதரர், டெலிபதி என்னும் நுண்ணுணர்வு குறித்த ஆர்வம் நெட்பிளிக்ஸில் பார்த்த சயின்ஸ்பிக்சன் தொடர் மூலமாகச் சிறுமிக்கு வந்ததாகத் தெரிவித்துள்ளார். அதேநேரம் இதுபோன்ற சுவாரஸ்யமான விஷயங்களுக்கு ஜெசிண்டா பதிலளிப்பது இது முதல்முறையல்ல. இதற்கு முன்பு அவர் குழந்தை பெற்றிருந்தபோதும், துப்பாக்கிச் சூட்டின்போதும் சிறுவர்களின் சுவாரஸ்ய கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க