``கொஞ்சம் அன்பா பேசுங்க..!” - அறிவுரை சொன்ன முதியவரைப் பேருந்திலிருந்து தள்ளிவிட்ட பெண் #ShockingVideo | Women pushed out the old man out of the bus

வெளியிடப்பட்ட நேரம்: 10:22 (15/05/2019)

கடைசி தொடர்பு:12:17 (15/05/2019)

``கொஞ்சம் அன்பா பேசுங்க..!” - அறிவுரை சொன்ன முதியவரைப் பேருந்திலிருந்து தள்ளிவிட்ட பெண் #ShockingVideo

அமெரிக்காவில் பெண் ஒருவர் முதியவரைப் பேருந்திலிருந்து தள்ளிவிட்டதில் முதியவர் பலியாகியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

முதியவரை  தள்ளி விடும் பெண்

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் வசித்து வருபவர், கதேஷா பிஷப். 25 வயது பெண். இவர் கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி பேருந்தில் பயணம் செய்ய தன் மகனுடன் ஏறியுள்ளார். அப்போது அவர் முண்டியடித்துக்கொண்டு ஏறியது மட்டுமல்லாது, எதிரே இறங்கிக்கொண்ட பயணிகளிடம் கோபமாக பேசியதாகத் தெரிகிறது. 

அப்போது பேருந்தில் இருந்த 74 - வயது முதியவர் ஒருவர், அமைதியாக அன்பாகப் பேசுங்கள் என அறிவுரை கூறியுள்ளார். ஆனால், தொடர்ந்து ஆத்திரத்துடன் பேசிய அந்தப் பெண், கையில் பொருள்களுடன் பேருந்தில் இருந்து இறங்க முயலும் அந்த முதியவரை ஆவேசமாகத் தனது இரு கைகளாலும் கீழே தள்ளி விடுகிறார்.

இதில் அவருக்குத் தலையில் காயம் ஏற்படுகிறது. ஆனாலும் அந்தப் பெண் தொடர்ந்து ஆவேசமாகப் பேசிக்கொண்டு இருக்கிறார். இந்தக் காட்சிகள் அனைத்தும் பேருந்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால், அதில் மைக் இல்லாததால் அவர்கள் பேசிய விவரங்கள் பதிவாகவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் செர்ஜி ஃபார்னியர் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த ஏப்ரல் மாதம் 23 -ம் தேதி பலியானார். 

முதியவர்

இது தொடர்பான வழக்கில் கதேஷா பிஷப் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றத்தில் கொலை வழக்கை சந்தித்து வருகிறார். இது தொடர்பான விசாரணை இம்மாதம் தொடங்கவுள்ள நிலையில், போலீஸார் நேற்று இந்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டனர். மேலும், இந்தச் சம்பவம் நடைபெற்றபோது பேருந்தில் பயணம் செய்த நபர்கள் யாராவது இருந்தால் நேரடி சாட்சி அளிக்க வருமாறு  அந்நாட்டு காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் லாஸ் வேகாஸ் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.