இரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி நிறுத்தம்! - தேர்தல் ரிசல்ட்டுக்குப் பின் இந்தியா முடிவு | Decision on oil purchase after Lok sabha result day

வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (15/05/2019)

கடைசி தொடர்பு:13:25 (15/05/2019)

இரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி நிறுத்தம்! - தேர்தல் ரிசல்ட்டுக்குப் பின் இந்தியா முடிவு

இரானிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் முடிவெடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா விதித்த பொருளாதாரத்தடை காரணமாக இரானிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை மே 2 முதல் இந்தியா நிறுத்திக்கொண்டது. இந்த நிலையில், இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளைப் பேணுவதற்காக இரண்டு நாள் பயணமாக இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் ஷரீப் இந்தியாவுக்கு வருகைதந்தார். இங்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்துப் பேசினார்.

சுஷ்மா ஸ்வராஜ்

சந்திப்பின்போது, கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கான தடை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அந்த ஆலோசனையின்போது, இரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது குறித்து தேர்தலுக்குப் பின்னர் அமையவுள்ள அரசுதான் முடிவெடுக்க முடியும் என்று இந்தியத் தரப்பில் கூறப்பட்டதாகத் தெரிகிறது. கச்சா எண்ணெயைப் பொறுத்தவரை, இந்தியாவின் தேவையில் 80% அளவுக்கு இறக்குமதி மூலமாகத்தான் பூர்த்திசெய்யப்படுகிறது. கச்சா எண்ணெயை அதிக அளவில் பயன்படுத்துவதில் உலக அளவில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் இராக், சவுதி அரேபியாவையடுத்து மூன்றாவது இடத்தில் இரான் உள்ளது. கச்சா எண்ணெய் ஏற்றுமதி தொடர்பாக ரஷ்யா, சீனா, துர்க்மெனிஸ்தான் மற்றும் இராக் போன்ற நாடுகளுடனும் இரான் ஆலோசித்து வருகிறது.