மாயமான கர்ப்பிணி; பத்து நாள்கள் கழித்து உயிருடன் கிடைத்த குழந்தை! | Baby found alive in dead women at chicago

வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (16/05/2019)

கடைசி தொடர்பு:20:09 (16/05/2019)

மாயமான கர்ப்பிணி; பத்து நாள்கள் கழித்து உயிருடன் கிடைத்த குழந்தை!

அமெரிக்காவின் சிகாகோவைச் சேர்ந்த 19 வயது மார்லன் ஓச்சோ லோபஸ் (Marlen Ochoa-Lopez ) என்ற பெண் ஏப்ரல் 23-ம் தேதி தன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதன் பிறகு மீண்டும் அவர் வீடு திரும்பவே இல்லை. ஒன்பது மாத கர்ப்பிணியான அவர் ஃபேஸ்புக்கில்  ‘ஹெல்ப் எ சிஸ்டர்’ என்ற குரூப்பில் இணைந்துள்ளார். அதன் மூலம் 44 வயதுடைய ஒரு பெண்மணியின் நட்பு மார்லனுக்கு கிடைத்துள்ளது.

மார்லன்

கடந்த மாதம் அவர் குழந்தைகளின் உடைகள், தொட்டில் போன்றவற்றை மார்லனுக்குத் தருவதாக கூறியுள்ளார். அதை வாங்குவதற்காகச் சென்றபோதே மார்லன் காணாமல் போயுள்ளார். இதையடுத்து, சமீபத்தில் சிகாகோ போலீஸார் ஓர் இடத்தில் இறந்த பெண்ணின் உடலைக் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து நடந்த சோதனையில் அது மார்லன் எனக் கண்டறியப்பட்டது. மேலும், அவரின் வயிற்றில் இருந்த குழந்தை காணாமல் போயுள்ளது.

கொலை

இது பற்றி பேசிய காவல்துறையினர், ``மார்லனை யாரோ சரமாரியாக தாக்கி, மூச்சு திணறடித்துக் கொலை செய்துள்ளனர். அவர் இறந்த பிறகு மார்லனின் குழந்தை வயிற்றில் உயிருடன் இருந்துள்ளது. குழந்தையைத் துன்புறுத்தி யாரோ வெளியில் எடுத்திருக்கிறார்கள். குழந்தை என்ன ஆனது போன்ற எந்தத் தகவலும் தெரியவில்லை விசாரணை நடைபெற்று வருகிறது’ எனக் காவல்துறை செய்தி தொடர்பாளர் ஆண்டனி குக்லில்மி கூறியுள்ளார்.

இந்த நிலையில், மார்லன் காணாமல் போன அதே நாளில் மற்றொரு இடத்தில் காயமடைந்த நிலையில் பச்சிளம் குழந்தை ஒன்று மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. மார்லனின் மரபணுவையும், குழந்தையின் மரபணுவையும் வைத்து நடந்த சோதனையில் அது மார்லனின் குழந்தைதான் எனத் தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குழந்தை

மார்லன் காணாமல் போனது பற்றி பேசியுள்ள அவரின் உறவினர், ``கடந்த மாதம் தான் ஆசிரியராக இருக்கும் பள்ளிக்குச் சென்றுவிட்டு நண்பரைப் பார்க்கச் சென்ற மார்லன் காணாமல் போனார். அவரைத் தேடி நிறைய அலைந்தோம். ஆனால் கிடைக்கவில்லை. இறுதியில் அவளின் உடல் இறந்த நிலையில் கிடைத்தது. மார்லனின் இறப்பு எங்களுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. அவளின் குழந்தையும் காணாமல் போன நிலையில் கடவுளின் ஆசியால் தற்போது மீண்டும் கிடைத்துள்ளது. குழந்தை பிறப்பதற்கு முன்பே அதற்கு யாடில் எனப் பெயர் வைத்தாள் மார்லன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

மார்லன் இல்லாமல் மேலும் இரண்டு சிகாகோ பெண்கள் தொடர்ச்சியாகக் 
காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது அமெரிக்க போலீஸ்.