புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹ 14,000 கோடி நஷ்டஈடு... மான்சான்டோவுக்கு மீண்டும் அடி! | American court ordered Monsanto to pay ₹14,000 rupees as a homage to victims

வெளியிடப்பட்ட நேரம்: 18:58 (16/05/2019)

கடைசி தொடர்பு:18:58 (16/05/2019)

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹ 14,000 கோடி நஷ்டஈடு... மான்சான்டோவுக்கு மீண்டும் அடி!

இந்தத் தீர்ப்பானது மான்சான்டோவுக்கு வரும் காலங்களில் மிகப்பெரிய இழப்பைக் கொடுக்கும் எனக் கருதப்படுகிறது. இனி வரிசையாக இருக்கும் வழக்குகளில் அபராதம் விதிக்கப்பட்டால், இந்நிறுவனம் பெரும் இழப்பீடுகளைச் சந்திக்க வேண்டி வரும். 

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹ 14,000 கோடி நஷ்டஈடு... மான்சான்டோவுக்கு மீண்டும் அடி!

மெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாண நீதிமன்றம், மான்சான்டோவுக்கு சுமார் 14,000 கோடி அபராதம் விதித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதை வெறும் தீர்ப்பாக மட்டும் கடந்து சென்றுவிட முடியாது. இந்த நிறுவனத்தின் ரவுண்ட் அப் களைக்கொல்லிக்கு எதிராக வழங்கப்படும் மூன்றாவது தீர்ப்பு இது. அமெரிக்காவில் முழுவதும் ரவுண்ட் அப் களைக்கொல்லியால் ஏற்பட்ட புற்றுநோய் பாதிப்பு தொடர்பான 13,400 வழக்குகள் தற்போது நிலுவையில் இருக்கின்றன. 

மான்சான்டோ என்பது அமெரிக்காவைச் சேர்ந்த வேளாண் ரசாயன மற்றும் உயிரித் தொழில்நுட்ப நிறுவனம். இதன் தலைமையிடம் அமெரிக்காவின் மிஸோரியில் உள்ளது. இந்த நிறுவனம் 1970-களில் ரவுண்ட் அப் (Round up) என்னும் களைக்கொல்லியை அறிமுகப்படுத்தியது. இந்தக் களைக்கொல்லியில் கிளைபோஸேட் (Glyphosate) என்னும் மூலப்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த நிறுவனம் மரபணு மாற்றப்பட்ட பயிர்களையும் உற்பத்தி செய்கிறது. 1970-களில் கிளைபோஸேட் முதன்முதலில் பயன்பாட்டுக்கு வந்தது. மேலும், 2010-ம் ஆண்டில் 130 நாடுகள் அதைப் பயன்படுத்தத் தொடங்கின. அதன்பின்னர் அமெரிக்கா, நெதர்லாந்து, எல் சால்வடார், இலங்கை, கொலம்பியா ஆகிய நாடுகள் தடைசெய்திருக்கின்றன.

மான்சான்டோ

தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில், "ஆல்வா மற்றும் ஆல்பெர்ட்டா (Alva and Alberta Pilliod) தம்பதியினர், ஹாட்ஜ்கின் லிம்போமா (Non-hodgkin lymphoma) எனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்குக் காரணம் இவர்கள் 30 வருடங்களாகப் பயன்படுத்திய ரவுண்ட்அப் களைக்கொல்லிதான். அதனால் தம்பதியினர் இருவருக்கும் சேர்த்து, சுமார் 14,000 கோடிக்கு மேல் நஷ்டஈடாக மான்சான்டோ நிறுவனம் செலுத்த வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவுண்ட் அப் களைக்கொல்லி விவகாரம் நீதிமன்றத்துக்கு வரும்போதெல்லாம் மான்சான்டோ பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. இந்தத் தீர்ப்பானது மான்சான்டோவுக்கு வரும் காலங்களில் மிகப்பெரிய இழப்பைக் கொடுக்கும் எனக் கருதப்படுகிறது. இனி வரிசையாக இருக்கும் வழக்குகளில் அபராதம் விதிக்கப்பட்டால், இந்நிறுவனம் பெரும் இழப்பீடுகளைச் சந்திக்க வேண்டி வரும். 

இதேபோல 2016-ம் ஆண்டு டுவைன் ஜான்சன் என்பவர் ஒரு வழக்கு தொடர்ந்தார். இவர் கலிபோர்னியாவில் பெனிசியா பகுதியில் உள்ள பள்ளியில் விவசாய நிலப் பராமரிப்பு வேலையாளாகப் பணிபுரிந்திருக்கிறார். 2014-ம் ஆண்டு, இவர் வெள்ளை அணுக்களைப் பாதிக்கும் 'நான் ஹாட்ஜ்கின் லிம்ஃபோமா (Non-hodgkin lymphoma)' என்னும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. அதற்குக் காரணம் அவர் பணியின்போது அதிகமாகப் பயன்படுத்திய மான்சான்டோ நிறுவனத்தின் ரவுண்ட் அப் மற்றும் ரேஞ்சர் போரோவாக இருக்கலாம் என சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்தார்.

ஜான்சனின் வழக்கை விசாரித்த நீதிமன்றம் எல்லாத் தரப்பு வாதங்களையும் கேட்டது. இந்தத் துறையின் வல்லுநர்களிடமும் விசாரித்தது. அதில் 2015-ம் ஆண்டு கிளைபோஸேட் டில் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் இருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு கூறியது. அதன் பின்னர் நீதிமன்றம், "மான்சான்டோ நிறுவனம் 39 மில்லியன் டாலர் இழப்பீடாகவும், இந்தக் களைக்கொல்லியின் ஆபத்தைப் பற்றி எச்சரிக்காத குற்றத்துக்காக 250 மில்லியன் டாலர் அபராதமாகவும், மொத்தம் 289 மில்லியன் டாலர் ஜான்சனுக்குத் தர வேண்டும்" எனத் தீர்ப்பளித்திருந்தது.

ரவுண்ட் அப் களைக்கொல்லியில் கிளைபோஸேட் (glyphosate) என்ற வேதிப்பொருள் விவசாயத் துறையில் களைக்கொல்லியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலக அளவில் பல நிறுவனங்கள் 'இது புற்றுநோய் உருவாக்கக் கூடும்' என்று குறிப்பிட்டிருக்கின்றன. ஆனாலும், இந்தக் களைக்கொல்லிகள் பெரும்பாலான இடங்களில் தீங்கற்றது என வகைப்படுத்தி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசின் சார்பிலோ, மாநில அரசின் சார்பிலோ எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

களைக்கொல்லி

இதுபற்றி தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர், அறச்சலூர் செல்வம் பேசும்போது, "இப்போது ரவுண்ட் அப் களைக்கொல்லிக்கான காப்புரிமை மான்சான்டோ நிறுவனத்திடம் மட்டும் இல்லை. பெரும்பாலான நிறுவனங்கள் 'கிளைபோஸேட்' களைக்கொல்லிகளைத் தயாரித்து வருகின்றன. இந்தியாவில் இத்தகைய களைக்கொல்லிகள் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் விவசாயம் அல்லாத புதர் நிலங்களில் மட்டுமே பயன்படுத்த இந்திய அரசு அனுமதி கொடுத்தது. அதன் பின்னர், நெல்லுக்கு கிளைபோஸேட் களைக்கொல்லியைப் பயன்படுத்தலாம் என விதியைக் கொஞ்சம் தளர்த்தியது. இந்த மூன்றையும் தவிர்த்து வேறு பயிர்களுக்கு களைக்கொல்லிகளை உபயோகிக்க முடியாது. ஆனால், இன்று பல பயிர்களில் களைக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்குக் களையெடுக்கும் ஆட்கள் பற்றாக்குறைதான் முக்கியமான காரணம். அதனால்தான் விவசாயிகள் களைக்கொல்லிகளை அதிகமான பயிர்களுக்குப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், கிளைபோஸேட் களைக்கொல்லிகள் மனிதருக்குத் தீங்கு தரும் என உலக சுகாதார நிறுவனமும் தெரிவித்திருக்கிறது. இதுபோக, மண்ணுக்கும் பயிர்களுக்கும் இது கேடுதான் தரும். எனவே, இந்த விஷயத்தில் இந்திய அரசும் தமிழக அரசும் அவசரமான முடிவுகளை எடுக்க வேண்டும். பக்கத்து மாநிலங்களில் இது தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் உடனடியாக கிளைபோஸேட் களைக்கொல்லியை தடை செய்ய வேண்டும்" என்றார்.

இந்தியாவின் பெரும்பாலான விவசாய நிலங்களில் இந்த ‘கிளைபோஸேட்’ ரவுண்ட் அப் பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மனிதர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாகக் கூறி ஆந்திர அரசும் கேரள அரசும் இந்த களைக்கொல்லியை தடை செய்துவிட்டன. இந்திய அரசு இதுபோன்ற விஷயங்களில் அக்கறை காட்டி விவசாயிகளுக்கும் மண்ணுக்கும் பாதிப்பு இல்லாமல் தடுக்க வேண்டிய நேரமிது. 


டிரெண்டிங் @ விகடன்