`90 பேர் அல்ல; 500 பேருக்கு ஹெச்.ஐ.வி தொற்று' - ஒற்றை ஊசியால் கிராமத்தையே அதிரவைத்த டாக்டர்! | More than 500 people have tested positive for HIV in Pakistan

வெளியிடப்பட்ட நேரம்: 14:55 (17/05/2019)

கடைசி தொடர்பு:11:51 (18/05/2019)

`90 பேர் அல்ல; 500 பேருக்கு ஹெச்.ஐ.வி தொற்று' - ஒற்றை ஊசியால் கிராமத்தையே அதிரவைத்த டாக்டர்!

ஹெச்.ஐ.வி தடுப்புக் கிருமிகளைக் கட்டுப்படுத்துவதற்காகச் செயல்படும் தனியார் அமைப்பு ஒன்று தென் பாகிஸ்தானின் லர்கானா மாவட்டத்தில் உள்ள ராடோ டெரோ என்ற கிராமத்தில் ஒரு முகாம் நடத்தினர். அந்த முகாமில், கிராமத்தில் உள்ள மொத்த பேருக்கும் அதாவது குழந்தைகள், பெரியவர்கள் உட்பட அனைவருக்கும் ஹெச்.ஐ.வி பரிசோதனை நடத்தப்பட்டது.

ஹெச்.ஐ.வி

ஹெச்.ஐ.வி முடிகளையும், தங்கள் குழந்தைகளையும் நினைத்து அந்தக் கிராம பெற்றோர்கள் பயத்தின் பிடியில் சிக்கினர். அன்று ஹெச்.ஐ.வி முடிவும் வந்தது. அதில் சுமார் ஐந்நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஹெச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் என்பது பெற்றோர்களுக்குப் பேரிடியாக இருந்தது. 

ஹெச்.ஐ.வி

இவ்வளவு பேருக்கு ஒரே நேரத்தில் எப்படி ஹெச்.ஐ.வி தொற்று ஏற்படும் என நினைக்கலாம். ஆனால், இதுதான் உண்மை. கடந்த வாரம் இதே ஹெச்.ஐ.வி தடுப்பு அமைப்பு அதே கிராமத்தின் ஒரு பகுதியில் சிலருக்கு ஹெச்.ஐ.வி பரிசோதனை செய்தது. அதன் முடிவில் சுமார் 90 பேருக்கு ஹெச்.ஐ.வி கிருமித் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவரும், ஏறத்தாழ ஒரே பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்ததால் சந்தேகமடைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கினர். ஆய்வின் முடிவில், ஒரே ஊசியை மறுசுழற்சிக்கு அனுப்பாமல் அதையே அனைவருக்கும் பயன்படுத்தியதன் விளைவே இத்தனை பேருக்கு ஹெச்.ஐ.வி தொற்று எனக் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கிராமத்தில் அனைவருக்கும் நடந்த சோதனையில்தான் ஐந்நூற்றுக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து நோயாளிகளுக்கு ஹெ.ஐ.வி தொற்று வரக் காரணமாக இருந்த மருத்துவர் முசாஃபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

 ஹெச்.ஐ.வி பரிசோதனை

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஐ.நா ஹெச்.ஐ.வி தடுப்பு அமைப்பு, ``பாகிஸ்தானில் உள்ள அதிகாரிகளுடன் இணைந்து நாங்களும் இது தொடர்பாக விசாரணை நடத்தவுள்ளோம். மேலும், பாகிஸ்தானில் மொத்தம் 6,00,000 தகுதி பெறாத மருத்துவர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்களைக் கண்டறிய வேண்டும். ஹெச்.ஐ.வி தொடர்பாகப் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

`என் பெண்ணுக்கும் ஹெச்.ஐ.வி தொற்று உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. நாங்கள் இப்போது உதவியற்ற நிலையில் சிக்கித் தவிக்கிறோம். எனக்கு மற்ற குழந்தைகளும் உள்ளனர். ஒரு குழந்தையால் பிறருக்கும் ஹெச்.ஐ.வி தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளேன். என் குழந்தைக்குத் தேவையான மருத்துவ உதவிகள், மருந்துகள் ஆகியவற்றை அரசு வழங்க வேண்டும். ஒரு வேளை மருத்துவ உதவிகள் வழங்கத் தவறினால் எங்கள் குழந்தைகள் அனைவரும் உயிரிழந்துவிடுவார்கள்” என பாகிஸ்தானில் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையின் தாய் பேசியுள்ளார்.