'2021-ம் ஆண்டு முதல் 14 இலக்க தொடர்பு எண்...' சிக்கலைத் தீர்க்க ஜப்பான் முடிவு | Japan plans to create 14-digit phone numbers

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (18/05/2019)

கடைசி தொடர்பு:06:30 (18/05/2019)

'2021-ம் ஆண்டு முதல் 14 இலக்க தொடர்பு எண்...' சிக்கலைத் தீர்க்க ஜப்பான் முடிவு

ஜப்பான்

ஜப்பான் நாட்டில் தற்போது 11 இலக்க தொடர்பு எண்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இவை அனைத்தும் 090, 080 மற்றும் 070 என்ற எண்களில் தொடங்குகின்றன. இந்த வரிசையில் 2022-ம் ஆண்டுக்குப் பிறகு, தொடர்பு எண்களை உருவாக்க முடியாது எனக் கருதப்படுகிறது. மேலும், 2020-ம் ஆண்டிலிருந்து 5G சேவை ஜப்பானில் பயன்பாட்டுக்கு வரும் என்பதால் மொபைல்கள் விற்பனையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற காரணங்களால் புதிய போன் நம்பர்களுக்கான தேவையும் அதிகரிக்கலாம். எனவே, தற்போது ஜப்பானின் தகவல் தொடர்பு அமைச்சகம் புதிய வரிசை தொடர்பு எண்களை உருவாக்கத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்படி இனிமேல் 14 இலக்க எண்கள் அடங்கிய தொடர்பு எண்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்பு எண்

நாட்டில் உள்ள மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களான NTT டொக்கோமோ, KDDI Corp மற்றும் SoftBank Corp ஆகியவை தகவல் தொடர்பு அமைச்சகத்தின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டிருக்கின்றன. இதன் மூலமாக வரும் 2021-ம் ஆண்டுக்குள் 10 பில்லியன் மொபைல் நம்பர்கள் புதிதாக வெளியிடப்படவுள்ளன. கடந்த 2017-ம் ஆண்டில் 'IoT' சாதனங்களுக்குக்காக '020' என்ற எண்களில் தொடங்கும்  80 மில்லியன் எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவையும் வேகமாக மக்களால் வாங்கப்பட்டதால் பாதியளவுக்கும் மேல் தீர்ந்துவிட்டன. தற்போது புதிய எண்களும் அதேபோல '020'ன் எண்களில் தொடங்கும் வகையில் உருவாக்கப்படவுள்ளன.