ஃபேஸ்புக் பழக்கம்.. எலெக்ட்ரிக் வயர் மூலம் தொப்புள்கொடி அறுப்பு! - குழந்தைக்காக கர்ப்பிணி கொடூரக் கொலை #Chicago | Mother, Daughter Charged For Killing Chicago Woman

வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (18/05/2019)

கடைசி தொடர்பு:12:20 (18/05/2019)

ஃபேஸ்புக் பழக்கம்.. எலெக்ட்ரிக் வயர் மூலம் தொப்புள்கொடி அறுப்பு! - குழந்தைக்காக கர்ப்பிணி கொடூரக் கொலை #Chicago

அமெரிக்காவின் சிகாகோவைச் சேர்ந்த 19 வயதான 9 மாத கர்ப்பிணிப் பெண் மார்லன் ஓச்சோ லோபஸ் (Marlen Ochoa-Lopez ). இவர் கடந்த ஏப்ரல் மாதம் 23-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தன் மூன்று வயது மகனைப் பள்ளியில் இருந்து அழைத்துக்கொண்டு அப்படியே  `ஹெல்ப் எ சிஸ்டர் அவுட் (Help a sister out)’ என்ற ஃபேஸ்புக் பக்கம் மூலம் கிடைத்த நண்பர் கிளாரிசா பிகுரோராவை (Clarisa Figueroa) நேரில் சந்தித்து அவரிடமிருந்து குழந்தைக்குத் தேவையான தொட்டில், உடைகளை வாங்கி வருவதாகக் கூறிவிட்டு கறுப்பு நிற ஹோண்டா சிவிக் காரில் புறப்பட்டுள்ளார். 

மார்லன்

மார்லன் புறப்பட்ட சில மணி நேரங்கள் கழித்து தன் வீட்டுக்குப் போன் செய்து தன்னால் மகனைப் பள்ளியில் இருந்து அழைத்து வரமுடியவில்லை எனத் தெரிவித்துள்ளார். அதற்கு முன்னதாக தன் கணவரிடம், ‘ எனக்கு மிகவும் சோர்வாக உள்ளது வண்டி ஓட்டமுடியவில்லை’ என மெசேஜ் செய்துள்ளார். அதன் பிறகு மார்லன் வீடு திரும்பவில்லை. நேரம் செல்லச் செல்ல மார்லன் வீட்டுக்கு வராததால் அவரை யாரோ கடத்திவிட்டதாக பயம் கொண்டுள்ளார் மார்லனின் தாய். 

இதைத் தொடர்ந்து மார்லன் காணாமல் போனது பற்றி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன தன் பெண்ணை பற்றிப் பேசியுள்ள ராக்கெல் யுரேஸ்டெகுய், `` மார்லன் மிகவும் தைரியமான பெண். தன் குடும்பம், குழந்தையை விட்டு வெளியில் செல்லும் அளவுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. கர்ப்பிணியான நேரத்தில் அவள் காணாமல் போய்விட்டாள் என்பதை என்னால் சற்றும் நம்பமுடியவில்லை. மார்லனின் முதல் குழந்தை அவளைக் காணாமல் உணவு உண்ணவும் மறுக்கிறான். அவளின் பழைய போட்டோக்கள் அனைத்தையும் காட்டித்தான் அவனைச் சமாதானப்படுத்தி வருகிறோம்’ எனக் கூறியுள்ளார்.

கொலை

இதற்கிடையில் தெற்கு சிகாகோவில் உள்ள குப்பை மேட்டில் இறந்த நிலையில் ஒரு பெண்ணின் உடல் கிடப்பதைக் காவலர்கள் கண்டுபிடித்துள்ளனர். விசாரணையின் இறுதியில் இறந்துகிடந்த பெண் மார்லன் என்பது தெரியவந்தது. ஆனால், அவரின் வயிற்றில் இருந்த குழந்தையைக் காணவில்லை. மார்லன் எப்படிக் கொல்லப்பட்டர். யார் அவரைக் கொலை செய்தது, அவரின் வயிற்றில் இருந்த குழந்தை என்ன ஆனது என்ற நிறைய கேள்விகளுக்கிடையே தீவிர விசாரணையில் இறங்கினர் சிகாகோ காவலர்கள்.  அந்த விசாரணையில் மார்லன், குழந்தைகளின் உடைகளை வாங்கச் சென்ற கிளாரிசா பிகுரோராவின் மீது சந்தேகம் எழுந்தது. அவரை அழைத்துச் சென்று காவலர்கள் விசாரணை நடத்தினர். 

இவை அனைத்துக்கும் நடுவே சிகாகோவில் மார்லன் உடல் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து சிறிது தூரத்தில், பிறந்த குழந்தை ஒன்று கிடந்ததாகவும் அதை மீட்டு யாரோ மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் காவர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக குழந்தையைத் தேடி போலீஸார் சென்றுள்ளனர். குழந்தை தொடர்பாக மருத்துவமனையில் இருந்த குறிப்பு காவலர்களுக்கு மிகவும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மார்லன் இறந்த அதே நாளில்தான் இந்தக் குழந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. பிறகு மார்லனுக்கும் சாலையில் கிடைத்த குழந்தைக்கும் நடந்த டி.என்.ஏ பரிசோதனையில் இந்தக் குழந்தை மார்லனுடையது என உறுதி செய்யப்பட்டது.

குழந்தை

மற்றொரு புறம் மார்லனின் ஃபேஸ்புக் நண்பர் கிளாரிசா மற்றும் அவரின் மகள் டெசரி ஃபிகரோ (Desiree Figueroa) மற்றும் மகளின் கணவர் பியோட் போபக் (Piotr Bobak) ஆகியவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வந்துள்ளது. அவர்களின் போன்கால்களை அவர்களுக்குத் தெரியாமல் சிகாகோ போலீஸார் ஆய்வு செய்துள்ளனர். அதில் பெரும் அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது. ஒரு குழந்தை சாலையில் கிடப்பதாக கிளாரிசாதான் சிகாகோ தீயணைப்புத் துறையினருக்கு போன் செய்து கூறியுள்ளார் என்பதைக் காவலர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து கிளாரிசா குடும்பத்தின் மீது சந்தேகம் வலுத்துள்ளது. தொடர்ச்சியான விசாரணையில் கிளாரிசாவின் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் மார்லன் வந்த கார் இருந்ததையும் கண்டுபிடித்து கிளாரிசாவின் குடும்பத்தினரை கைது செய்துள்ளனர் போலீஸார்.

கிளாரிசா

அவர்களிடம் நடந்த தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.  ‘ கிளாரிசாவுக்கு 27 வயதில் ஒரு மகன் இருந்துள்ளான். உடல் ரீதியான சில பிரச்னைகளால் கடந்த வருடம் அந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். அவர் இறந்த பிறகு ஒரு குழந்தையை எடுத்து வளர்க்க வேண்டும் என நினைத்த கிளாரிசா, மார்லனை தன் வீட்டுக்கு வரவழைத்து அவரை மூச்சு திணறடித்து கொலை செய்துள்ளார். மார்லன் இறந்த பிறகு அவரது வயிற்றில் இருந்த குழந்தையை வெளியில் எடுத்து எலக்ட்ரிக் ஒயர் மூலம் தொப்புள் கொடியை அறுத்துள்ளார். பிறந்த குழந்தை மூச்சு விடாமல் இருக்கவே அவர் தீயணைப்புத் துறையினருக்கு போன் செய்துள்ளார்’ எனக் காவலர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இருந்தும் மார்லன் கொலைக்கான முக்கிய தகவல்கள் ஏதும் இன்னும் கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் உள்ள குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளது. அதற்குத் தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. மார்லனின் குடும்பத்தினரிடம் தற்போது குழந்தை ஒப்படைக்கப்பட்டுள்ளது. ‘ ஒன்பது மாத கர்ப்பிணியான மார்லனின் மரணத்துக்கு நீதி கிடைத்தே தீரவேண்டும். அவரைக் கொன்றவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்’ என மார்லனின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள கிளாரிசாவின் குடும்பத்தினர் நேற்று சிகாகோ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.