`நீ நல்ல உணவைத் திருடவில்லை' - அமெரிக்க இளைஞனை நெகிழவைத்த இந்தியர்! | Indian Shop Owner In US Catches Hungry Teen

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (18/05/2019)

கடைசி தொடர்பு:20:39 (22/05/2019)

`நீ நல்ல உணவைத் திருடவில்லை' - அமெரிக்க இளைஞனை நெகிழவைத்த இந்தியர்!

ஜெய் சிங் என்ற இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட நபர் ஒருவர், அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில்  சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி வருகிறார். இந்தக் கடைக்கு சமீபத்தில் பொருள்கள் வாங்க இளைஞர் ஒருவர் வந்தார். அப்போது சில உணவுப் பொருள்களை தனது பாக்கெட்டுகளில் எடுத்துப்போட்டுக்கொண்டார். இதை சிசிடிவி கேமராக்களில் பார்த்துக்கொண்டிருந்துள்ளார் ஜெய் சிங். பின்னர், சிறிது நேரத்தில் பில் கவுண்ட்ருக்கு வந்த அந்த இளைஞர் ஒரு பொருளுக்கு மட்டும் பணம் செலுத்தினார். பாக்கெட்டுகளில் வைத்திருந்த பொருள்களுக்குப் பணம் செலுத்தவில்லை. இதைக் கவனித்த அங்கிருந்த ஜெய் சிங் பாக்கெட்டுகளில் இருக்கும் பொருள்களை வெளியே எடுக்கச் சொல்ல இளைஞரும் எடுத்துள்ளார். அதில் நிறைய பொருள்கள் இருப்பதைப் பார்த்தவுடன் இளைஞர் திருடியதை அடுத்து அங்கிருந்த ஊழியரை போலீஸுக்குப் போன் செய்யச் சொல்லியுள்ளார்.

அமெரிக்க இளைஞர் 

போன் செய்வதற்கு முன்னதாக `எதற்காகத் திருடினாய்?' இளைஞரிடம் ஜெய் சிங் கேட்க, ``பசிக்கிறது. என்னிடம் கொஞ்சம்தான் பணம் இருந்தது. அதனால்தான் இப்படிச் செய்தேன்" எனக் கூறியுள்ளார். இளைஞரின் இந்த விளக்கத்தைக் கேட்ட உடன் போலீஸுக்குப் போன் செய்வதைத் தடுத்ததுள்ளார் சிங். மேலும், அவரின் நிலையை உணர்ந்த சிங், ``நீங்கள் திருடியுள்ளது உணவு அல்ல. அது வேறு. பேப்பர் ஒட்டும் பசையும் நொறுக்கு தீனிகளும்தான். உங்களுக்குப் பசி என்றால் என்னிடம் சொல்லுங்கள். நான் உணவு தருகிறேன்" எனக் கூறியதுடன் இளைஞருக்குத் தரமான உணவுப் பொருள்களைக் கொடுத்துள்ளார். 

இந்தியர் ஜெய் சிங்

இளைஞர் திருடியது தெரிந்தும் ஏன் போலீஸைக் கூப்பிடவில்லை என விளக்கமளித்துள்ள சிங், ``அவர் பசிக்கிறது அதற்காகத்தான் திருடினேன் எனக் கூறினார். அவர் கூறியது உண்மைதான். அவர் முகம் பசியால் வாடியிருந்தது. அவரின் சூழ்நிலையின் உண்மைத் தன்மையைத் தெரிந்துகொண்டேன். அதனால்தான் உணவு கொடுத்தேன். ஒருமுறை ஜெயிலுக்குச் சென்றுவிட்டால், அதன் பின்னர் வரும் கிரிமினல் ரெக்கார்டு வாழ்நாள் முழுவதும் அவரைத் துரத்தும். அதுமட்டுமல்ல வேலை உள்ளிட்ட எதுவும் பெற முடியாது. இதை உணர்ந்துதான் போலீஸுக்குத் தகவல் சொல்லுவதைத் தடுத்தேன்" எனக் கூறியுள்ளார். இந்தச் சம்பவங்களை நேரில் பார்த்துக்கொண்டிருந்த அமெரிக்கர் ஒருவர் சிங்கின் செயலைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது வைரலாகப் பரவ சிங்குக்குப் பாராட்டுகள் குவிந்ததுடன், அந்தப் பதிவு 2.8 ஆயிரம் ஷேர்களையும், 9.2 ஆயிரம் லைக்ஸ்களையும் பெற்று டிரெண்டாகி வருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க