ரசிகர்களுடன் செல்ஃபி; அர்னால்டுக்கு கிக் விட்ட இளைஞர் - வைரல் வீடியோ | Arnold attacked at event in South Africa

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (19/05/2019)

கடைசி தொடர்பு:15:20 (19/05/2019)

ரசிகர்களுடன் செல்ஃபி; அர்னால்டுக்கு கிக் விட்ட இளைஞர் - வைரல் வீடியோ

ஹாலிவுட் பிரபலம், பாடி பில்டர், அரசியல் தலைவர் எனப் பல முகங்களை கொண்டவர் அர்னால்டு.  டெர்மினேட்டர், ப்ரிடேட்டர் போன்ற பல ஹாலிவுட் படங்கள் மூலம் உலக அளவில் ரசிகர்களைக் கொண்டவர். 

அர்னால்டு

71 வயதாகும் அர்னால்டு நேற்று ஆப்ரிக்காவில் உள்ள ஜோஹனெஸ்பர்க்கில் நடந்த ஒரு விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த நிகழ்ச்சிக்கு நடுவே அர்னால்டு தன் ரசிகர்களுடன் இணைந்து பேசிக்கொண்டும் புகைப்படம் எடுத்துக்கொண்டும் இருந்தார். அந்த நேரத்தில் பின்னால் வந்த ஒருவர் அர்னால்டு முதுகில் எட்டி உதைத்துத் தள்ளினார். கண் இமைக்கும் நொடியில் நடந்த இந்த சம்பவத்தை கண்டு அங்கு இருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

 தாக்கப்பட்ட காட்சி

பிறகு அர்னால்டை உதைத்தவரை அவரின் பாதுகாவலர்கள் சுற்றிவளைத்துப் பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர். தான் தாக்கப்பட்டதை அறிந்த அடுத்த சில நில நொடிகளில் தன் உடன் இருந்தவர்களிடம் ‘ எனக்கு ஒன்றும் இல்லை நன்றாக இருக்கிறேன்’ எனச் சமாதானம் கூறியுள்ளார் அர்னால்டு.  இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது. எதற்காக அந்த நபர் அர்னால்டை உதைத்தார் எனத் தெரியவில்லை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் பற்றி ட்விட்டரில் வீடியோவுடன் கருத்து பதிவிட்டுள்ள அர்னால்டு., “ என்னைப் பற்றிய உங்கள் கவலைகளுக்கு நன்றி. ஆனால் அங்குக்  கவலை படும் அளவுக்கு எதுவும் நடக்கவில்லை. அதிகக் கூட்டத்தின் காரணமாக நான் தள்ளப்பட்டேன் என்றுதான் முதலில் நினைத்தேன். ஏனெனில் நிறைய முறை அதை நான் அனுபவித்துள்ளேன். உங்களைப் போல் நானும் வீடியோ பார்த்த பிறகுதான் தெரிந்தது என்னை யாரோ உதைத்துத் தள்ளினார் என்பது. நல்ல வேளையாக  அந்த முட்டாளால் ரசிகர்களுடனான என் உரையாடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.