ஜஸ்டின் பீபர் பாடிய `ஐ வில் ஷோ யூ' பாடலால், ஐஸ்லாந்து பள்ளத்தாக்கு மூடல்! | Icelandic canyon shut down after a Justin Bieber song

வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (20/05/2019)

கடைசி தொடர்பு:16:25 (20/05/2019)

ஜஸ்டின் பீபர் பாடிய `ஐ வில் ஷோ யூ' பாடலால், ஐஸ்லாந்து பள்ளத்தாக்கு மூடல்!

பிரபல பாப் பாடகர்களில் ஒருவரான ஜஸ்டின் பீபர், தன் ரசிகர்கள் மீது எச்சில் துப்புவது, மது அருந்திவிட்டு வேகமாக கார் ஓட்டுவது என அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்வார். அந்த வரிசையில், இப்போது அவர் மீது எழுந்திருக்கும் சர்ச்சை இயற்கை சீரழிவு சார்ந்ததாக இருக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டின் நவம்பர் மாதத்தில், `ஐ வில் ஷோ யூ' என்கிற ஆல்பத்தை யூடியூபில் வெளியிட்டார் அவர். இந்த வீடியோ முழுவதும் ஐஸ்லாந்து நாட்டில் உள்ள பியாதரார்க்ளியூபர் (Fjadrárgljúfur) என்கிற பள்ளத்தாக்கில் படமாக்கப்பட்டிருக்கும்.

ஜஸ்டின் பீபர்

இதில் என்ன பிரச்னை என்கிறீர்களா? இவர் அந்த வீடியோவை யூடியூபில் வெளியிட்ட பிறகு,  அதிகம் அறியப்படாத இடமாக இருந்த இந்தப் பள்ளத்தாக்கு, உலக அளவில் பாப்புலராகிவிட்டது. ஜஸ்டின் பீபர் விசிட் அடித்த, அந்தப் பள்ளத்தாக்குக்கு அவருடைய ரசிகர்களும் அதிகம் வர ஆரம்பித்தார்கள். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க, சத்தமேயில்லாமல் அரங்கேறியிருக்கிறது இயற்கை சீரழிவு.

இது குறித்து லோன்லி பிளானட் எழுத்தாளர் சாஷா பிராடி, பியாதரார்க்ளியூபர் பள்ளத்தாக்குப் பகுதிகள், ஜஸ்டின் பீபரின் வருகைக்குப் பிறகு மோசமான மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதால், இங்குள்ள தாவரங்கள் பாதிக்கப்படுவதாகவும், பயணிகள் பள்ளத்தாக்குப் பகுதிகளை நடந்து சுற்றிப் பார்ப்பதால் அவை சேதமடைவதாகவும், பள்ளத்தாக்குக்குச் செல்லும் வழித்தடங்களும் பாதிப்புக்குள்ளாவதாகவும் லோன்லி பிளானட் வலைதளத்தில் கட்டுரை ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அந்தக் கட்டுரையில், கடந்த 2017 மற்றும் 2018 ஆண்டின் இடைப்பட்ட காலங்களில் மட்டும் இந்தப் பள்ளத்தாக்கைப் பார்வையிட்டோர்களின் எண்ணிக்கை 2.82 லட்சமாக அதிகரித்திருக்கிறது. ஜஸ்டின் பீபர் வருகைக்கு முந்தைய காலகட்டத்துடன் இதை ஒப்பிடும்போது, வருடம்தோறும் பார்வையாளர்களின் எண்ணிக்கை 2016, 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் முறையே 50%, 60% மற்றும் 80% அதிகரித்திருப்பதாகவும் அவர் பதிவு செய்திருந்தார்.

இதைக் கவனித்த அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைப்பு, தாவரங்களைப் பாதுகாக்கும் நோக்கில் பள்ளத்தாக்குப் பகுதிகளைப் பார்வையிடுவதற்கு கடந்த மார்ச் மாதத்தில் இரண்டு வாரங்களுக்குத் தடை விதித்தது. இந்தத் தடை தாவரங்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் எனவும், சீக்கிரமாகவே தடை நீக்கப்படும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்திருந்தது. ஆனால், அங்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பில் முன்னேற்றம் காணப்படவில்லை என்பதால், வருகிற ஜூன் 1, 2019 வரை தடை நீட்டிப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. 

இது குறித்து அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர், குட்முண்டூர் இங்கி குட்ராண்ட்ஸன் சமீபத்தில் பேசியபோது, ``ஐஸ்லாந்து பள்ளத்தாக்கின் பாதிப்புக்கு ஜஸ்டின் பீபர்தான் காரணம் என்று எளிமையாகச் சொல்லிவிட்டுப் போய்விடலாம். ஆனால், பிரபலங்கள் ஓர் இடத்தைத் தனது ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும்போது, அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். ஐஸ்லாந்து நாட்டின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறையின் பங்கு அதிகமாக இருக்கிறது. இருப்பினும் இயற்கை பாதிப்படைவதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று தெரிவித்திருக்கிறார்.