`இப்படி ஒரு கிஃப்ட் வந்ததே இல்ல!' - பட்டம் பெற்ற மாணவர்களுக்கு கோடீஸ்வரர் அளித்த இன்ப அதிர்ச்சி | millionaire says he will pay the students debt

வெளியிடப்பட்ட நேரம்: 16:29 (20/05/2019)

கடைசி தொடர்பு:16:29 (20/05/2019)

`இப்படி ஒரு கிஃப்ட் வந்ததே இல்ல!' - பட்டம் பெற்ற மாணவர்களுக்கு கோடீஸ்வரர் அளித்த இன்ப அதிர்ச்சி

அமெரிக்காவின் பிரபல கல்லூரியில் டாக்டர் பட்டம் பெற்ற கோடீஸ்வரர் ஒருவர் அக்கல்லூரியில் படித்த அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி ஒன்றைக் கொடுத்தார்.

smith

அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள மோர்ஹவுஸ் கல்லூரி. ஆண்கள் கல்லூரியான இதில் அமெரிக்காவின் வரலாற்று சிறப்புமிக்க கல்லூரிகளில் ஒன்று. இக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. சுமார் 400 மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார் தொழிலதிபர் ராபர்ட் ஸ்மித். 



ஸ்மித்

அமெரிக்காவில் இருக்கும் பணக்கார கறுப்பினத்தவர்களில் ராபர்ட் ஸ்மித்தான் முதலிடம். ஃபோர்ப்ஸ் பத்திரிகையின்படி இவரது சொத்து மதிப்பு சுமார் 5 பில்லியன் அமெரிக்க டாலர். அதாவது சுமார் 35,000 கோடி ரூபாய். ஃபோர்ப்ஸ் உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் ஸ்மித் 355-வது இடத்தில் இருக்கிறார். மென்பொருள், தகவல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் இவரது நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது. 

கோடீஸ்வரர் ராபர்ட்

இந்த நிலையில்தான் மோர்ஹவுஸ் கல்லூரியில் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தப் பட்டத்தைப் பெற்றுக்கொண்ட அவர் அங்கு பட்டம் பெற இருந்த மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஒன்றைக் கொடுத்தார். அங்கு இருக்கும் மாணவர்களின் கடன்களை நானே அடைக்கிறேன் என்று அறிவித்தார். ஸ்மித், ``8 தலைமுறைகளாக என் குடும்பம் இங்குதான் வாழ்கிறது. என் குடும்பத்தினரின் சார்பாக இதை நான் சொல்கிறேன். இங்கு இருக்கும் மாணவர்களின் கடன்களை நானே அடைக்கிறேன்” என்றார். 

மகிழ்ச்சியில் மாணவர்கள்

இந்த அறிவிப்பைச் சற்றும் எதிர்பார்க்காத மாணர்வர்களும் ஆசிரியர்களும் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர். இந்தக் கல்லூரி வரலாற்றில் இது மிகப் பெரிய பரிசு என அக்கல்லூரியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அக்கல்லூரியின் கணக்குகள்படி சுமார் 40 மில்லியன் அமெரிக்க டாலர். அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் 278 கோடி ரூபாய். 

முன்னதாக இந்தக் கல்லூரிக்குத் தனியாக 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கினார் ஸ்மித். மாணவர்களின் கடன்களை ராபர்ட் ஸ்மித் அடைத்ததுதான் அமெரிக்காவின் தற்போதைய வைரல் டாபிக்.