`ஒரு ஊர்ல ஒரு இளவரசி இருந்தாளாம்..!’ - மருத்துவமனையில் நடந்த ஓர் நெகிழ்ச்சி சம்பவம் #DisneyPrincess | 23-Month-Old Girl Gets Surprise Disney Princess Send-Off

வெளியிடப்பட்ட நேரம்: 07:45 (21/05/2019)

கடைசி தொடர்பு:20:44 (22/05/2019)

`ஒரு ஊர்ல ஒரு இளவரசி இருந்தாளாம்..!’ - மருத்துவமனையில் நடந்த ஓர் நெகிழ்ச்சி சம்பவம் #DisneyPrincess

டிஸ்னி ப்ரின்சஸ்

Photo Source: abcnews.go.com


‘டிஸ்னி பிரின்சஸ்’ என்ற அடைமொழியுடன் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு குழந்தை பிரபலமாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த Emma Krall என்ற அந்தக் குழந்தை, தனது  23 மாத கால மருத்துவ வாழ்க்கை முடித்து தற்போது வீடு திரும்பியுள்ளது. ஜூன் 20, 2017-ம் ஆண்டு  பிறந்த அந்தக் குழந்தைக்கு உடல் வளர்ச்சிக் குறைபாடு இருந்துள்ளது.   இதையடுத்து அக்குழந்தை மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டது. குழந்தை பிறந்த 6 வாரத்தில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டு, பின்னர் அது மருத்துவர்களின் கண்காணிப்பிலே இருந்துள்ளது. மருத்துவமனையில் இருந்தபோது, டிஸ்னியில்  ஒளிபரப்பாகும் குழந்தைகளுக்கான படங்களைப் பார்த்துவந்துள்ளது. ஒரு ஊர்ல ஒரு இளவரசி இருந்தாளாம்... போன்ற கதைகள் ஒளிபரப்பாக, எம்மாவும் தன்னை  ஓர் இளவரசி போல் கற்பனை செய்துகொண்டார்.

இளவரசி

Photo Source: abcnews.go.com

கடந்த மாதம்தான் குழந்தைக்கு முதுக்குத்தண்டில் அறுவைசிகிச்சை நடந்துள்ளது. சுமார் 5 மணி நேரம் இந்த சிகிச்சையைச் செய்துள்ளனர். குழந்தை படிப்படியாகக் குணமடைந்துள்ளது. இதையடுத்து, அவரை மருத்துவர்கள் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்துள்ளனர். பிறந்தது முதல் மருத்துவமனையிலே சிகிச்சைபெற்றுவந்த குழந்தையை சந்தோஷமாக வழி அனுப்ப வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முடிவெடுத்தனர். எம்மாவின் அம்மாவும் மருத்துவமனையின் செவிலியர்களும் குழந்தைக்கு இளவரசி போல் அலங்காரம் செய்துள்ளனர். அவளது அறையையும் அலங்காரம் செய்துள்ளனர். அந்தக் குழந்தைக்குப் பிடித்த பூக்கள் மற்றும் உடைகளை அணிவித்து, தலையில் கீரிடம், கையில் ஒரு கோள் ஆகியவற்றைக் கொடுத்து, ஒரு இளவரசியைப் போல வழியனுப்பியுள்ளனர்.   'Tangled' படத்தில் வரும் இளம்பெண்ணைப் போல எம்மாவின் தாய் சிகை அலங்காரம் செய்திருந்தார். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கார்ட்டூன் கதாபாத்திரங்களைப் போன்று வேடமிட்டிருந்தனர்.

மருத்துவர்கள்

Photo Source: abcnews.go.com


இதுகுறித்துப் பேசியுள்ள குழந்தையின் தாய்,  “மருத்துவமனை மற்றும் வீடுகளில் இருந்தபோது, நாங்கள் எப்போதும் டிஸ்னியில் ஒளிபரப்பாகும் படங்களையே பார்த்துவந்தோம். எம்மாவுக்கு 'Tangled','The Little Mermaid' படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அவளுக்கு பூக்கள் மற்றும் பிங்க் நிறம் பிடிக்கும். மருத்துவர்கள் அவளை வழியனுப்பிய விதம் மிகவும் அற்புதமான நினைவுகள். இது உணர்வுபூர்வமாக இருந்தது. எம்மாவும் இதனை மிகவும் விரும்பினாள். அவள் மகிழ்ச்சியாக இருந்தாள்” என்றார்.