`நமக்கு இருப்பது ஒரு உலகம்தான்... பாதுகாக்க வாருங்கள்!' - சுவீடனிலிருந்து ஓர் அபயக் குரல் | Greta Thunberg created global student strike movement

வெளியிடப்பட்ட நேரம்: 10:41 (21/05/2019)

கடைசி தொடர்பு:10:41 (21/05/2019)

`நமக்கு இருப்பது ஒரு உலகம்தான்... பாதுகாக்க வாருங்கள்!' - சுவீடனிலிருந்து ஓர் அபயக் குரல்

 சமீபத்தில், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு சுவீடனைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் அனுப்பிய செய்தி, வீடியோவாக வைரலாகியது. பருவநிலை மாற்றத்தில் பிரதமர் மோடி கவனம் செலுத்த அந்த வீடியோவில் கேட்டுக்கொண்டிருப்பார், மாணவி க்ரேடா தன்பெர்க். பருவநிலை மாற்றத்திற்கு ஸ்வீடன் அரசு கவனம் செலுத்த வேண்டும் என பள்ளியைப் புறக்கணித்துவிட்டு  சுவீடன் பாராளுமன்றம் முன்பு, கடந்த ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இன்றுமே உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம், அதனால் எழவிருக்கும் சிக்கல்கள் தொடர்பான விவாதங்கள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. பிரிட்டன் பாராளுமன்றமும் பருவநிலை நெருக்கடியைப் பிரகடனப்படுத்தியுள்ளது. பருவநிலை மாற்றத்தால், பல லட்சம் நுண்ணுயிர்கள் அழிவின் விளிம்பில் உள்ளதாக ஐ.நா-வும் எச்சரித்துள்ளது. 

பருவநிலை மாற்றங்களுக்காக க்ரேடா தன்பெர்க் நடத்திய போராட்டம், வெகு விரைவில் உலகம் முழுவதும் வைரலானது. முதலில் தனிநபராக அவர் தொடங்கிய போராட்டத்தில், பின்னர் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இணைந்துகொண்டனர். வெகுவிரைவில் அது fridayforfuture என ஒரு இயக்கமாக மாறியது. பின்னர், வெள்ளிக்கிழமை நாள்களில் மட்டும் பள்ளியைப் புறக்கணித்துவிட்டு  சுவீடன் பாராளுமன்றம் முன்பு போராட்டங்களைத் தொடர்ந்தனர். 

கடந்த மார்ச் 15-ம் தேதி, உலகளாவிய போராட்டம் ஒன்றை நடத்தினர். 125 -க்கும் மேற்பட்ட நாடுகளில் 2000 -க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. பல்வேறு பருவநிலை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா எனப் பல கூட்டங்களில் கலந்துகொண்டு க்ரேடா தன்பெர்க் பேசிவருகிறார். பல்வேறு சர்வதேச விருதுகளையும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார் இந்த இளம் செயற்பாட்டாளர். 

மாணவர்களை, இளைஞர்களை ஒன்றுதிரட்டி, அரசியல் தலைவர்களிடம் பருவநிலை மாற்றம் தொடர்பாக அழுத்தம் தருவதைக் குறிக்கோளாகக்கொண்டு செயல்பட்டுவருகிறார். சமீபத்தில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “இளைஞர்களாகிய எங்களிடமிருந்து எங்கள் எதிர்காலம் பறிக்கப்பட்டுவருகிறது. எங்களுக்கு அதைப் பார்த்து கோபம் வர வேண்டும். அந்தக் கோபத்தை நாங்கள் செயலாக மாற்ற வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, வருகிற மே 24-ம் தேதி, உலகளாவிய ஸ்ட்ரைக் ஒன்றில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளார். இது, குறிப்பாக பள்ளி மாணவர்கள், இளைஞர்களைக் குறிவைத்துள்ளது. ”நமக்கு இருப்பது ஒரு உலகம்தான், அதைப் பாதுகாக்க வாருங்கள்” என்று இந்தப் பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது. மாணவர்களின் செவிகளுக்கு எட்டியுள்ள இன்றைய சமகால தேவை, எப்போது உலக அரசியல்வாதிகளின் செவிகளுக்கும் மனங்களுக்கும் எட்டும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க