`மணிக்கு 600 கி.மீ வேகம்!' - விமானங்களுக்கு டஃப் கொடுக்கும் சீனாவின் அடுத்த மின்னல் வேக ரயில் | China introduces prototype for 600 km/hr maglev train

வெளியிடப்பட்ட நேரம்: 18:05 (24/05/2019)

கடைசி தொடர்பு:18:05 (24/05/2019)

`மணிக்கு 600 கி.மீ வேகம்!' - விமானங்களுக்கு டஃப் கொடுக்கும் சீனாவின் அடுத்த மின்னல் வேக ரயில்

மணிக்கு 600 கிலோமீட்டர் வேகம்வரை எட்டும் புதிய ரயிலின் மாதிரியை ஷின்டோவ் (Qingdao) நகரில் அறிமுகப்படுத்தியுள்ளது சீனா. இந்த ரயில்கள் பயன்பாட்டுக்கு வரும்போது விமான சேவைகளுக்கே போட்டியாக அமையும் என நம்பப்படுகிறது. China Railway Rolling Stock Corporation (CRRC) என்னும் சீனா அரசின் துணைநிறுவனம்தான் இந்த ரயிலை வடிவமைத்துள்ளது.

இதில் ஈடுபட்டிருக்கும் பொறியியலாளர்கள், இது மொத்த சீனாவின் போக்குவரத்தையும் மாற்றியமைக்கும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர். ``பெய்ஜிங்கையும் ஷாங்காயையும் எடுத்துக்கொள்ளுங்கள். இவற்றுக்கிடையே விமானத்தில் சென்றால் 4.5 மணி நேரம் ஆகும். இப்போது இருக்கும் அதிவேக ரயில்களில் 5.5 மணிநேரம் ஆகும். இதுவே இந்தப் புதிய ரயில்களில் 3.5 மணி நேரம்தான் ஆகும்" என்கின்றனர் அவர்கள். மணிக்கு 600 கிலோமீட்டர் வேகத்தைத் தொடும் முதல் ரயிலாக இது இருக்காது. ஏற்கெனவே 2015-ல் ஜப்பான் மேக்லெவ் ரயில் சோதனை ஓட்டங்களில் மணிக்கு 603 கிலோமீட்டர் வேகத்தைத் தொட்டது.

சீனா ரயில்

P.C: CRRC

Magnetic Leviation தொழில்நுட்பத்தில் காந்த சக்தியால் இயங்கும் இந்த ரயில்கள். 53 மீட்டர் உள்ள இந்த மாதிரியில் ஓட்டுநருக்கான ஒரு பெட்டியும், பயணிகளுக்கான ஒரு பெட்டியும் இருக்கிறது. 2016-ல் அறிவிக்கப்பட்ட ஐந்து வருட மேக்லெவ் முன்னேற்றத் திட்டத்தின்கீழ் இது தயாராகிவருகிறது. இதற்கான சோதனை தடங்கள் 2021-ல் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாதிரி ரயில்
PC: China SCIO

இந்தத் திட்டத்தின் பட்ஜெட் இந்திய மதிப்பில் சுமார் 3200 கோடி ரூபாய். இதில் 430 கோடி சீன அரசு நிதியில் இருந்துவரும். ஏற்கெனவே சீனாவில் சற்றே குறைந்த வேகத்தில் 2002 முதல் maglev ரயில்கள் இயக்கப்பட்டுதான் வருகின்றன. மேக்லெவ் தொழில்நுட்பம்தான் ரயில்களின் எதிர்காலம் என்பதை இந்தத் திட்டங்கள் மீண்டும் அழுத்திக் கூறுகின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க