உணவளித்த ஆசிரியர் இறந்தது தெரியாமல், தினமும் வகுப்பறை முன் வந்துநிற்கும் நாய்! | Dog stands in front of the classroom to see the Died teaches who feed it

வெளியிடப்பட்ட நேரம்: 07:34 (25/05/2019)

கடைசி தொடர்பு:12:36 (28/05/2019)

உணவளித்த ஆசிரியர் இறந்தது தெரியாமல், தினமும் வகுப்பறை முன் வந்துநிற்கும் நாய்!

ளர்ப்பு பிராணிகளில் எப்போதுமே நாய்க்கு என தனி இடமுண்டு. ஆறு அறிவுள்ள மனிதர்கள் கூட ஒருவர் செய்த உதவியை மறந்துவிடுகின்றனர். ஆறு அறிவுள்ள மனிதர்களே அப்படியிருக்கும் சூழலில் ஐந்து அறிவுள்ள, ஒரு நாய் தனக்கு உணவளித்தவர் இறந்ததுகூட தெரியாமல் தினமும் அவர் வேலை செய்த கல்லூரியின் வகுப்பறைக்கு முன்பு எதிர்பார்த்து உட்கார்ந்திருப்பதை உங்களால் நம்பமுடியுமா? நம்பித்தான் ஆகவேண்டும்.

வகுப்பறை முன்வந்து நின்ற நாய்

Photo: ViralPress

பிலிப்பைன்ஸின் பாம்பாங்கா (pampanga)-வில் உள்ள மாபலகட் நகர கல்லூரியில் 58 வயதுடைய கார்மெலிட்டோ என்பவர் ஆசிரியராக வேலைசெய்து வந்துள்ளார். அவர் தினமும் ஒரு நாய்க்குக் காலை நேரத்தில் டிபன், மதியத்தில் ஸ்நாக்ஸ் என வகுப்பறைக்கு வெளியே வைத்து இரண்டு ஆண்டுகளாகக் கொடுத்து வந்துள்ளார். சாப்பிட்ட பிறகு அந்த நாய் அந்தக் கல்லூரியின் கேம்பஸ் அருகிலோ அல்லது சாலையின் ஓரத்திலோ தூங்கிவிடுமாம். தினமும் வந்து சாப்பிட்டுவிட்டு அருகில் எங்காவது தூங்குவது வழக்கமாக இருந்துள்ளது. இப்படி கார்மெலிட்டோவிற்கும் அந்த நாய்க்குமான நட்பு இருந்துள்ளது. இந்நிலையில் பக்க வாதத்தால் பாதிப்படைந்த கார்மெலிட்டோ சில வாரங்களுக்கும் மேலாகக் கல்லூரிக்கு செல்லாமல், வீட்டிலேயே ஓய்வு எடுத்துவந்த நிலையில் கடந்த மே 18-ம் தேதி உயிரிழந்துள்ளார்.

Dog

Photo: ViralPress

இதை அறியாத அந்த நாயோ கடந்த இரண்டு வாரமாக அவரது வகுப்பறைக்கு வெளியே சென்று நிற்பது, எதிர்பார்ப்பது என இருந்துள்ளது. அங்கிருந்த மாணவர்கள் இதனைப் பார்த்துள்ளனர். ஆனால் அதனைப் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. தொடர்ச்சியாக இரண்டு வாரமாக நாய் வந்து காத்திருந்ததை கண்ட மாணவர்கள் வியந்து போயுள்ளனர். பின்னர் அவரின் புகைப்படம் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு நாயை அழைத்துச் சென்றுள்ளனர்.அவரது புகைப்படத்தைக் கண்ட நாய் அதனை தொட்டுப் பார்த்து அதன் அருகே தலையை சாய்த்து அமர்ந்துள்ளது. நாயின் அந்த செயல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கண்கலங்கச்   செய்துள்ளது. தற்போது அந்த நாய்க்கு உணவு மற்றும் இருப்பதற்கு ஏற்ற இருப்பிடம் ஆகியவற்றை அமைக்க ஏற்பாடு செய்து வருவதாகக் கூறப்படுகிறது. அந்த  நாயின் புகைப்படம் மற்றும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.