காட்டுக்குள் 17 நாள்கள்; தனியாக சிக்கிக்கொண்ட பெண்... திக்திக் நிமிடங்கள்! | Yoga teacher Amanda Eller, who survived 17 days in a Hawaii forest

வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (27/05/2019)

கடைசி தொடர்பு:12:00 (27/05/2019)

காட்டுக்குள் 17 நாள்கள்; தனியாக சிக்கிக்கொண்ட பெண்... திக்திக் நிமிடங்கள்!

காட்டுக்குள்

காணாமல் போவதென்பதே ஒரு திகிலான அனுபவம்தான். அதுவும் 2,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட அடர்ந்த காட்டுப்பகுதியில் தொலைந்துபோனால், ஈரக்குலையுடன் சேர்ந்து அனைத்துமல்லவா நடுங்கும். அப்படியான ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. ஹவாய் மாகாணத்தைச் சேர்ந்தவர் அமண்டா எல்லெர் (வயது 35). யோகா பயிற்சியாளரான இவர் கடந்த 8-ம் தேதி மக்கோவா நகரில் உள்ள வனப்பகுதிக்கு காரில் சென்றிருக்கிறார். பின்னர் அவர் அங்கு ஓர் இடத்தில் காரை நிறுத்திவிட்டு வனப்பகுதிக்குள் நடந்து சென்றிருக்கிறார். அதன் பின்னர் அவர் திரும்பவேயில்லை. 

இதையடுத்து அமண்டா எல்லெர் குடும்பத்தினர் அவரை செல்போனில் தொடர்புகொள்ள முயன்றிருக்கிறார்கள். ஆனால், அவர் செல்போன், பணப்பையை காரிலேயே விட்டுச் சென்றிருப்பது பிறகுதான் தெரியவந்திருக்கிறது. அமண்டா எல்லெர் மாயமான விவரத்தைத் தெரிந்ததும், தேடுதல் பணி தொடங்கியிருக்கிறது. அடர்ந்த காட்டுப்பகுதி என்பதால், அவரை உடனே கண்டுபிடிக்க முடியவில்லை. 1000-க்கும் மேற்பட்டோர் தேடும் பணியில் ஈடுபட்டும் எந்தப் பலனும் இல்லை. இதையடுத்து, அமண்டா எல்லெரை கண்டுபிடித்துத் தருபவருக்கு 50,000 டாலர் பரிசாக வழங்கப்படும் என அவரது குடும்பத்தினர் அறிவித்தனர். அவர்கள் அதோடு நிறுத்திவிடாமல் ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்து அவர்களும் தேடுதல் வேட்டையில் இறங்கினர். 

 

அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. அவர் காணாமல் போன காட்டுப்பகுதியின் ஓர் இடத்தில், அமெண்டா எல்லெரின் அசைவுகள் தென்பட்டிருக்கிறது. உயிருடன், நீர்வீழ்ச்சிக்கு அருகில் அமர்ந்திருப்பதை மீட்புக் குழுவினர் கண்டதும், அவரைப் பத்திரமாக மீட்டு, மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். கார் நின்ற இடத்திலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் வனப்பகுதிக்கும் வழி தெரியாமல் நடந்திருக்கிறார் அமெண்டா. அதனால் அவருடைய கால்கள் பலத்த காயம் அடைந்த நிலையில் நகரமுடியாதபடி ஆகியிருக்கிறது.  

காட்டுக்குள்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. 17 நாள்கள் காட்டுக்குள் தொலைந்துபோன தனது திக்திக் நிமிடங்களை, சாப்பிட எதுவுமில்லாமல் இலைகளை மட்டும் சாப்பிட்டு சர்வைவல் ஆன விவரங்களைக் கண்ணீருடன் வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். இப்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.