``அவனின் கண்களை பார்க்கணும்னு நினைத்தேன்!” - சீரியல் கில்லரின் மரணத்தை நேரில் பார்த்த பாதிக்கப்பட்ட பெண் | Women witnessed the man's execution who raped in early 80's

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (27/05/2019)

கடைசி தொடர்பு:13:00 (27/05/2019)

``அவனின் கண்களை பார்க்கணும்னு நினைத்தேன்!” - சீரியல் கில்லரின் மரணத்தை நேரில் பார்த்த பாதிக்கப்பட்ட பெண்

1984 -ம் ஆண்டு... அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் தொடர்ச்சியாக நடந்த கொலைகளால் ஆடிப் போய் இருந்தது காவல்துறை. கொலை செய்யப்பட்ட பெண்கள் கொடூரமான முறையில் பல்வேறு இடங்களில் வீசப்பட்டனர். இந்த `சீரியல் கில்லர்’ யார் என்பது அறியக் காவல்துறை கடுமையான விசாரணை மேற்கொண்டது. ஆனால் எந்த தகவலும் கிடைக்காமல் திணறியது. 6 மாத காலத்தில் 10 பேர் வரை கொடூரமாக கொல்லப்பட்டனர். 

சீரியல் கில்லர்

தொடர் கொலைகள் நடைபெற்ற பகுதிகளில் இருந்து கிடைக்கப்பட்ட ஆதாரங்களைக் கொண்டு போலீஸார் சில க்ளூகள் வைத்திருந்தனர். அப்போது  17 வயதான பெண் ஒருவர் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார் அளிக்கிறார். மேலும் அவர் அளித்த பல்வேறு தகவல்களால் பாபி ஜோ லாங் என்பவர் கைது செய்யப்படுகிறார். 

விசாரணையில் அவர் 10-க்கும் மேற்பட்டவர்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரின் தொடர்ச்சியானக் கொடூர செயலில் அப்போது 17 வயது சிறுமியான லிசா நோலாண்ட் சிக்கினார். தேவாலயத்தின் வெளிபுறத்தில் வைத்து அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர், பின்பு அவரை தப்பிச் செல்ல அனுமதித்தார். விசாரணையில் அவர் உயிருடன் விட்ட ஒரே ஆள் லிசா என்று பின்னர் தெரிந்தது. அப்போது அவர் மூலமாகத்தான், நாம் சிக்க போகிறோம் என்பதை அறியவில்லை  பாபி ஜோ லாங். 

லாங்

இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையின் முடிவில், அவருக்கு  28 ஆயுள் தண்டனையும் மரண தண்டனையும் வழங்கப்பட்டது. இந்நிலையில் சுமார் 35 ஆண்டுகள் கழித்து கடந்த வியாழக்கிழமை அவரது மரண தண்டனை நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பாபி ஜோ லாங் சிக்க காரணமாக இருந்த லிசா அவரது தண்டனையை நேரில் பார்க்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். இதற்காக அவருக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது. 

லிசா நோலண்ட்

முன் வரிசையில் அமர்ந்திருந்தவர்,  பாபி ஜோ லாங்  விஷ ஊசி மூலம் கொல்லப்படுவதை நேரடியாகப் பார்த்தார். பின்னர் கண்களில் நீருடன் வெளியே வந்தார். தற்போது அமைதியாக உணர்வதாகத் தெரிவித்தார். லிசா நோலாண்ட், ``நான் அந்நேரத்தில் அவனின் கண்களை பார்க்க வேண்டும் என்றுதான் சென்றிருந்தேன். ஆனால் அவன் கடைசி வரையில் கண்களை திறக்கவே இல்லை. உண்மையில் தண்டனை நிறைவேறப்படுவதை உணர்ந்த நான் ஆறுதலாக உணர்ந்தேன்” என்கிறார்.  

நோலாண்ட், ஒருவேளை ஜோ லாங் -கிடம் பேசியிருந்தால், அவர் என்னைத் தேர்வு செய்ததற்கு நன்றி தெரிவிப்பேன் என்றார். ``வேறு 17 வயது பெண்ணை அவர் பாலியல் வன்கொடுமை செய்திருந்தால், அவர்களால் நான் இதைக் கையாண்ட அளவுக்குச் செய்திருக்க முடியுமா எனத் தெரியாது. நான் ஒருமுறை தற்கொலை செய்ய முடிவெடுத்தும் நல்லவேளை அதனைச் செய்யவில்லை” என்றார்.