`பிழைக்கமாட்டாள் என்றே நினைத்தோம்’ - ஆரோக்கியமாக வீடு திரும்பிய உலகின் மிகச் சிறிய குழந்தை | World's Smallest Surviving Baby Finally Goes Home

வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (30/05/2019)

கடைசி தொடர்பு:13:05 (30/05/2019)

`பிழைக்கமாட்டாள் என்றே நினைத்தோம்’ - ஆரோக்கியமாக வீடு திரும்பிய உலகின் மிகச் சிறிய குழந்தை

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் உலகிலேயே மிகவும் எடை குறைவான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தபோது அதன் எடை, கால் கிலோவுக்கும் குறைவாக, அதாவது வெறும் 245 கிராம் மட்டுமே இருந்தது. கிட்டத்தட்ட ஒரு பெரிய ஆப்பிள் பழத்தின் எடையைப்போன்றது. தாயின் வயிற்றில் 23 வாரங்கள், 3 நாள்கள் மட்டுமே வளர்ச்சியடைந்த குழந்தை, கடந்த 2018, டிசம்பர் மாதத்தில் பிறந்தது. 

எடை குறைவான குழந்தை

குழந்தை பிறந்தபோது அது பிழைப்பதே அதிசயமான ஒன்றாக இருந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து ஐந்து மாதங்கள் சிகிச்சையளிக்கப்பட்டது. தற்போது அந்தக் குழந்தை வீட்டுக்கு அழைத்துச்செல்லும் அளவுக்கு உடல்நலம் தேறிவிட்டதால் அதுகுறித்த செய்தியை மருத்துவமனை வெளியிட்டுள்ளது. குழந்தையின் பெற்றோர்களுக்கு பிரைவஸி பாதிக்கக் கூடாது என்பதால் அதற்கு `செய்பி' என்று மாற்றுப்பெயரிட்டுள்ளனர். 

செய்பி, தாயின் கருவிலிருந்தபோது அவளின் வளர்ச்சிக் குறைபாடுகளால் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டதால், முழுவளர்ச்சியடையும் முன்னரே பிரசவம் நடந்தது. ``செய்பி பிறந்தபோது மிகவும் குட்டியாக இருந்தாள். படுக்கையில் படுக்க வைத்திருந்தால் எங்களால் அவளைப் பார்க்கக்கூட முடியாது. அவ்வளவு குறைவான எடையில் இருந்தாள்" என்று ஆச்சர்யத்துடன் மருத்துவமனை செவிலியர் கூறுகிறார்.

குழந்தை

குழந்தைக்குச் சிகிச்சையளித்த மருத்துவர்கள் இதுகுறித்து கூறும்போது, ``குழந்தை பிறந்தபோது அது பிழைக்குமென்று எதிர்பார்க்கவேயில்லை. அதன் நுரையீரல் வளர்ச்சியடையாத நிலையில் இருந்ததால், குழந்தையின் உடலுக்குள் செயற்கை சுவாசக்குழாய் நுழைக்கப்பட்டது. தற்போது குழந்தை நல்லபடியாக சுவாசித்தாலும் இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்கு மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பும் தேவைப்படும்" என்றார்கள்.