`பணிச் சுமை; மன உளைச்சல்!’ - சக பணியாளர்கள் மீது கொலை வெறி துப்பாக்கிச் சூடு நடத்திய ஊழியர் | public utility employee opened fire on co-workers in Virginia

வெளியிடப்பட்ட நேரம்: 09:41 (01/06/2019)

கடைசி தொடர்பு:09:41 (01/06/2019)

`பணிச் சுமை; மன உளைச்சல்!’ - சக பணியாளர்கள் மீது கொலை வெறி துப்பாக்கிச் சூடு நடத்திய ஊழியர்

அமெரிக்காவின் தென் கிழக்கில் உள்ளது விர்ஜினியா (Virginia) என்ற மாகாணம். நேற்று மாலை அங்கு தனி மனிதர் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு

நேற்று மாலை சுமார் 4 மணியளவில் (இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5:30) விர்ஜினியா கடற்கரைக்கு அருகில் உள்ள முனிசிபல் அலுவலகத்தில் பொதுமக்கள், பிற ஊழியர்களும் தங்கள் வேலைகளில் மும்முரமாக இருந்துள்ளனர். அப்போது அதே அலுவலகத்தில் பணி செய்யும் ஒருவர், இரண்டாவது தளத்தில் இருந்த அந்த அலுவலகத்துக்கு வெளியே நின்றிருந்த ஒரு பெண்ணின் தலையில் துப்பாக்கியால் சுட்டுள்ளார். 

விர்ஜினியா முனிசிபல் அலுவலகம்

சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்த பலரையும் கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். சம்பவம் அறிந்து அடுத்த சில நிமிடங்களில் அந்த இடத்தை போலீஸார் சுற்றி வளைத்துள்ளனர். அந்த ஊழியர், போலீஸார் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். போலீஸாருக்கும் அவருக்கும் இடையே நடந்த நீண்ட நேரத் துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு ஊழியர் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

விர்ஜினியா முனிசிபல் அலுவலகம்

சம்பவத்தை நேரில் பார்த்த எட்வர்டு வீடன் என்பவர் இது பற்றி கூறும்போது, ``நானும் என் சக பணியாளர்கள் முனிசிபல் அலுவலகத்தில் உள்ள முதல் தளத்தில் வேலை செய்துகொண்டிருந்தோம். அப்போது  திடீரென பயங்கர சத்தத்துடன் யாரோ கீழே விழுவது போன்ற சத்தம் கேட்டது. அதிர்ந்துபோன நாங்கள் வெளியில் வந்து பார்த்தோம். அப்போது மாடி படிக்கட்டுகளில் ரத்த வெள்ளத்தில் ஒரு பெண் கிடந்தார். பின்னர் என் நண்பர் ஒருவர் மெதுவாக மேல் தளத்துக்குச் சென்று பார்த்துவிட்டு உடனடியாக கீழே வந்து `அங்கு யாரோ துப்பாக்கிச் சூடு நடத்துகிறார்கள். நாம் சீக்கிரம் இந்த இடத்தைவிட்டு வெளியேற வேண்டும்’ எனக் கூறினார். அந்த நேரத்தில் நான் செய்வதறியாது திகைத்து நின்றிருந்தேன். நாங்கள் வெளியில் சென்று பார்த்தபோது அந்த நபர் கொலைவெறியுடன் துப்பாக்கிச்சூடு நடத்தினார்” எனக் கூறியுள்ளார்.

விர்ஜினியா முனிசிபல் அலுவலகம்

``என்ன நடந்தது என்பது தொடர்பாக முனிசிபல் அலுவலகத்தில் இருந்தவர்களிடம் நாங்கள் விசாரணை நடத்திவருகிறோம். துப்பாக்கி சத்தம் கேட்டவுடன் சிலர் அலுவலக மேஜைகளின் கீழ் ஒளிந்துகொண்டு தப்பித்துள்ளனர். சம்பவ இடத்தில் ஒரு கைத்துப்பாக்கியும், குழல் துப்பாக்கியும் இருந்தது. குற்றவாளி சட்டபூர்வமாக அந்தத் துப்பாக்கிகளை வைத்திருந்துள்ளார். அவரைப் பற்றி தகவல்கள் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்த அனைவருக்கும் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

வேலைச் சுமை மற்றும் அதிருப்தியால் மன உளைச்சலில் இருந்த குற்றவாளி தன் சக பணியாளர்களைச் சுட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக எங்களுக்குப் பல சந்தேகங்கள் எழுந்துள்ளது. நாங்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என விர்ஜினியா போலீஸார் தெரிவித்துள்ளனர்.