10 அடி உயரம்... 50 அடி தூரம்..!- ராட்சச பலூனில் விளையாடிய குழந்தைகளுக்கு நடந்த சோகம் | 4 kids went to come after the tragedy incident

வெளியிடப்பட்ட நேரம்: 12:51 (01/06/2019)

கடைசி தொடர்பு:12:51 (01/06/2019)

10 அடி உயரம்... 50 அடி தூரம்..!- ராட்சச பலூனில் விளையாடிய குழந்தைகளுக்கு நடந்த சோகம்

குழந்தைகள் எது செய்தாலும் ரசிக்கலாம். நமக்கு என்ன பிரச்னை இருந்தாலும் ஒரு குழந்தை தனக்கான உலகத்தில் ஆடிப் பாடி விளையாடுவதைக் கொஞ்ச நேரம் பார்த்தாலே, அனைத்து டென்ஷனும் பறந்து போய்விடும். அப்படிதான் அன்றும் அந்தக் குழந்தைகளும் விளையாடிக்கொண்டிருந்தனர். தன்னை மறந்து குழந்தைகள் விளையாடுவதைப் பார்த்துக்கொண்டு இருந்தனர் பெற்றோர்கள். ஆனால், அவர்கள் வாழ்வில் பெரும் வலியைத் தந்துவிட்டுச் சென்றது ஒரு பலத்த காற்று. 

குழந்தைகள் - பலூன்

Source: Reuters

ஆம், ரஷ்யாவில் ஒரு ஷாப்பிங் மாலின் வெளியில் குழந்தைகள் துள்ளிக் குதித்து விளையாடும் வகையிலான ராட்சச பலூன் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. நமது ஊரிலும் பொருட்காட்சி, ஷாப்பிங் மால் உள்ளிட்ட இடங்களில் குழந்தைகளைக் கவர்வதற்காக இப்படி வைத்திருப்பார்கள். அங்கும் அப்படிதான் வைத்திருந்தார்கள். அதில் 5 குழந்தைகள் சம்பவம் நடக்கும் வேளையில் துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்தனர். 

விபத்து

Photo Credit: East2west 

அப்போது எதிர்பாராத வகையில் அந்த இடத்தில் சுழற்காற்று வீசியது. இதில் இந்த பலூன் தூக்கி வீசப்பட்டது. சுமார் 10 அடி உயரத்துக்குப் பறந்த பலூன், 50 அடி தூரத்தில் சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்தது. பலூன் தலைகீழாக கவிந்ததால், அதில் இருந்த குழந்தைகளுக்கு தலையில் பலத்த அடிபட்டது. 5 குழந்தைகளுக்கும் காயம் ஏற்பட்ட நிலையில், பெற்றோர்கள் பதறியபடி அங்கு சென்று குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். காயம் அடைந்த 5 குழந்தைகளில் 4 பேர் கோமா நிலையில் உள்ளனர் என்ற செய்தியைக் கேட்டுப் பெற்றோர்கள் அதிர்ந்துவிட்டனர்.

விபத்து

Photo Credit: East2west 

அதில் இரு குழந்தைகளுக்கு மண்டை ஓட்டில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இன்னொரு குழந்தைக்கு தாடையில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் அனைவரும் 3 முதல் 7 வயதுக்குட்பட்டவர்கள். 
இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், ``நாங்கள் பார்த்த காட்சி என்பது கொடூரமானது. பலூன் சாலையில் கவிழ்ந்தது. பெற்றோர்கள் அதிர்ச்சியில் ஓடினார்கள். நல்ல வேளையாக அப்போது அந்த சாலையில் வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. ஓடி இருந்தால் பெற்றோர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டிருக்கும்” என்றனர்.

இந்த விபத்து குறித்து கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் இந்த பலூன் கான்க்ரீட் கல்லுடன் இணைக்கப்பட்டிருந்தது என்றும், ஆனால், அந்தக் கயிறு அறுபட்ட நிலையில் இருந்ததைக் கவனிக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது. இந்தக் காட்சிகள் அனைத்தும் அந்த மாலின் வெளியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகள் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.