இலங்கையில் புத்தத் துறவி உண்ணாவிரதம்... அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் ராஜினாமா! | all Sri Lanka’s Muslim ministers resign

வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (04/06/2019)

கடைசி தொடர்பு:11:45 (04/06/2019)

இலங்கையில் புத்தத் துறவி உண்ணாவிரதம்... அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் ராஜினாமா!

லங்கையில், அதிபர் சிறிசேனா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் ஒட்டுமொத்தமாகப் பதவியை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இலங்கை அமைச்சர்கள் ராஜிநாமா

இலங்கையில், ஈஸ்டர் தினத்தில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலுக்குப் பிறகு , அந்த நாட்டில் ஆங்காங்கே மதக் கலவரங்கள் வெடித்து வருகின்றன. இந்நிலையில், சக்திவாய்ந்த  புத்தத் துறவி ஆர்துலியா ரத்னா, இலங்கை அதிபர்  அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 3  முஸ்லிம் அமைச்சர்களைப் பதவிநீக்கம் செய்யக் கோரி,  சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். இவர்களுக்கும்  இலங்கையில்  வெடிகுண்டுத் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக புத்தத் துறவி குற்றம் சாட்டினார். 

புத்தத் துறவியின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, சிறிசேனா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 9 முஸ்லிம் அமைச்சர்களும் ஒட்டுமொத்தமாகப் பதவியை ராஜினாமா செய்தனர்.  இரு மாகாண ஆளுநர்களும் பதவி விலகியுள்ளனர். ராஜினாமாவுக்குப் பிறகு கொழும்பு நகரில்  செய்தியாளர்களை அமைச்சர்கள் கூட்டாகச் சந்தித்தனர். இலங்கை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர், ராஃப் ஹக்கீம் கூறுகையில், '' புத்தத் துறவியின் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து, இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்கள் கடந்த இரு நாள்களாகப் பதற்றமாக இருக்கிறார்கள். பதற்றத்தைத் தணிக்கும் வகையில் நாங்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளோம். எங்களில் யார் மீதாவது தவறு இருந்தால் தாராளமாகத் தண்டியுங்கள்'' என்றார்.

உண்ணாவிரதம் இருந்த புத்த துறவி

ராஜினாமா செய்தவர்களில் 4 பேர் கேபினட் அந்தஸ்தில் இருந்தவர்கள்.  5 பேர் இணையமைச்சர்கள். பதவியை ராஜினாமா செய்தாலும் தொடர்ந்து சிறிசேனா அரசுக்கு ஆதரவு அளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை நிதியமைச்சர் மங்கள சமரவீரா, '' முஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமா செய்திருப்பது இலங்கைக்கு  அவமானகரமான செயல் '' என்று தெரிவித்துள்ளார். தமிழ் எம்.பி ஆபிரஹாம் சுமந்திரன் , ''நேற்று நாங்கள், இன்று நீங்கள்... நாளை இன்னொரு புதியவர்'' என்று முஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய நிர்பந்தம் செய்ததற்குக்  கண்டனம் தெரிவித்துள்ளார். 

முஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமாவைத்  தொடர்ந்து,  புத்தத் துறவி 4 நாள்களாக இருந்துவந்த உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க