ஆண், பெண் ஊழியர்களுக்கு `ஜொமோட்டோ' கொடுத்த இன்ப அதிர்ச்சி! | Zomato gives 26 weeks paternity leave

வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (04/06/2019)

கடைசி தொடர்பு:15:25 (04/06/2019)

ஆண், பெண் ஊழியர்களுக்கு `ஜொமோட்டோ' கொடுத்த இன்ப அதிர்ச்சி!

ஸ்டார்ட் அப் நிறுவனமான ஜொமோட்டோ, உலகம் முழுவதும் 13 நாடுகளில் உணவு விநியோக சேவையில் ஈடுபட்டுவருகிறது. இந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு, கர்ப்ப கால ஓய்வு மற்றும் குழந்தை பிறந்த பிறகு பராமரிப்புக்கென 26 வார காலத்துக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையை, ஜொமோட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் அறிவித்துள்ளார். 

ஜொமோட்டோ

இதுகுறித்த அவரது அறிவிப்பில், ``பெண் ஊழியர்கள் கர்ப்ப காலத்தில் தங்களது உடல்நலனையும் கவனித்துக்கொண்டு நிறுவனத்தில் பணியாற்றுவது மிகவும் கடினமான செயல். எனவே, வேலையிலிருந்தே நின்றுவிடுகிறார்கள். மீண்டும் அவர்கள் நிறுவனத்தில் சேர நினைக்கும்போது அவர்களுக்கான இடத்தில் இன்னொருவர் வந்துவிடுவதால் அவர்களுக்கு மீண்டும் பணி வாய்ப்பு கிடைப்பதும் கடினம். இந்த நிலையை மாற்றுவதற்காக எங்கள் நிறுவன ஊழியர்களுக்கு, 26 வாரங்களுக்கு சம்பளத்துடன்கூடிய பேறுகால விடுப்பு அளிக்க முடிவெடுத்துள்ளேன்" என்று கூறியிருக்கிறார். 

இவர் இதோடு தனது அறிவிப்பை நிறுத்தாமல், ``ஆண்களும் பெண்களும் சமம் என்ற கோட்பாட்டை வலியுறுத்தும்விதமாக, ஆண்களுக்கும் 26 வார காலத்துக்கு சம்பளத்துடன்கூடிய பேறுகால விடுப்பு அளிக்கப்படும்" என அறிவித்துள்ளார். எனவே, குழந்தையைப் பெற்றுக்கொடுப்பது மனைவியென்றாலும், குழந்தையை உடனிருந்து பராமரிக்கும் பொறுப்பை ஆண்களும் ஏற்க வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளார். பிறந்த குழந்தையின் நலனுக்காக 1,000 டாலர் மானியமாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

தீபிந்தர்

விடுப்புடன்கூடிய பேறுகால விடுப்பு, குழந்தையைத் தன் வயிற்றில் சுமந்து பெற்றுக்கொள்ளும் பெற்றோர்களுக்கு மட்டுமின்றி, வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டவர்கள், குழந்தையைத் தத்து எடுத்துக்கொண்டவர்கள் மற்றும் ஒரே பாலினத்துக்குள் திருமணமானவர்களுக்கும்கூட பொருந்தும் என்று கூறியுள்ளார். தனது ஊழியர்களின் நலனில் அக்கறையோடிருக்கும் ஜொமோட்டோ நிறுவனம், சமீபத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த ராமு என்ற மாற்றுத்திறனாளி இளைஞருக்கு வேலை அளித்து அழகு பார்த்தது குறிப்பிடத்தக்கதாகும்.