காற்று மாசுக்கு எதிராகப் போராடுவோம்... ஐ.நா-வின் புதிய போர் #BeatAirPollution | UN environment started its new campaign on air pollution for World Environmental Day

வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (05/06/2019)

கடைசி தொடர்பு:12:25 (05/06/2019)

காற்று மாசுக்கு எதிராகப் போராடுவோம்... ஐ.நா-வின் புதிய போர் #BeatAirPollution

இன்று, உலக சுற்றுச்சூழல் தினம். ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு, ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு சுற்றுச்சூழல் பிரச்னையை மையமாகக் கொண்டு, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னெடுத்துவருகிறது. அதன்மூலம், மக்கள் மத்தியில் விழிப்புணர்வுப் பிரசாரங்களையும் சுய மாற்றங்களையும் உருவாக்குகிறது. காற்று, நீர் போன்ற மாசுபாடுகளை எதிர்த்து ஒவ்வோர் ஆண்டும் பல முன்னெடுப்புகளை இந்த தினத்தை முன்னிட்டு செயல்படுத்துகிறது ஐக்கிய நாடுகள் சபை.

காற்று மாசுபாடு

ஐ.நா-வின் இந்த செயற்பாட்டில், இந்த ஆண்டு இடம்பிடித்துள்ள மிக முக்கியமான சூழலியல் பிரச்னை, காற்று மாசுபாடு. அதற்காக அவர்கள் உருவாக்கியுள்ள #BeatAirPollution ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டாகிவருகிறது. "உலக மக்களில் 90 சதவிகிதம் பேர்  மாசடைந்த காற்றையே சுவாசித்துவருகின்றனர். அதைச் சரிசெய்ய, நாம் காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராடியாக வேண்டும். நாம், நம்மால் முடிந்த அளவுக்கு காற்று மாசு ஏற்படக் காரணமாக இருக்கும் வாயுக்களை வெளியிடும் செயல்களில் மிகக் கவனமாக இருப்போம்" என்ற கருத்தோடு இது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதை சர்வதேச அளவில் பல தலைவர்களும் பல நட்சத்திரங்களும் வழிமொழிந்துள்ளனர். 

உலக சுற்றுச்சூழல் தினம்

"காற்று மாசுபாடு குறித்து ஏதேனும் நீங்கள் செய்யவிரும்பினால், உடனடியாகச் செய்யுங்கள். அது, காற்றை சுத்தப்படுத்தும் முயற்சியாக மட்டும் இருக்காது. காலநிலை அவசரத்தைச் சரிசெய்வதிலும் பங்கு வகிக்கும்" என்று கூறியுள்ளார், சூழலியல் விஞ்ஞானியும் ஐ.நா சுற்றுச்சூழல் துறையின் இணை இயக்குநருமான, தான்சானியாவைச் சேர்ந்த ஜோய்ஸ் இம்சூயா (Joyce Msuya).