``காற்று மாசு குறித்த அக்கறையே இல்லை!” - இந்தியாவை விமர்சித்த டொனால்டு ட்ரம்ப் | "India, China, Russia dont treat pollution with responsibility" says Donald Trump

வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (06/06/2019)

கடைசி தொடர்பு:08:40 (06/06/2019)

``காற்று மாசு குறித்த அக்கறையே இல்லை!” - இந்தியாவை விமர்சித்த டொனால்டு ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் உடனான சந்திப்புக்கு பிரிட்டன் சென்றிருந்தார். அப்போது, அவரிடம் பேட்டியெடுத்த ஓர் ஆங்கிலப் பத்திரிகையிடம், அமெரிக்காதான் இருப்பதிலேயே தூய்மையான சுற்றுச்சூழலைக் கொண்டுள்ளது என்றும் இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளை விமர்சித்தும் பேசியுள்ளார். 

டொனால்டு டிரம்ப்

பேட்டியின்போது ட்ரம்ப், ``அமெரிக்காதான் உலகிலேயே தூய்மையான நாடு. நாங்கள் இன்னமும் மேம்பட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால் இந்தியா, சீனா, ரஷ்யா மத்தியில் மாசுபாடுகள், சுகாதாரம் ஆகியவை பற்றிய அக்கறையே இல்லை. அவர்களிடம் தூய்மையான காற்று, சுத்தமான குடிநீர் ஆகியவை கிடையாது. சில நகரங்களுக்குச் சென்றீர்கள் என்றால், நான் பெயரைக் குறிப்பிடப் போவதில்லை. நீங்கள் இந்த நாடுகளின் சில நகரங்களுக்குச் சென்றீர்கள் என்றால், உங்களால் சுவாசிக்கக்கூட முடியாமல் போகலாம். இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் மாசுபாட்டைக் கையாள்வதில் ரொம்ப மோசம். அவர்கள் பொறுப்புணர்ந்து செயல்படுவதில்லை" என்று கூறியுள்ளார். 

பாரிஸ் ஒப்பந்தம் குறித்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் முடிவுகளை ரத்து செய்துவிட்டு, அமெரிக்காவை அந்த ஒப்பந்தத்திலிருந்து ட்ரம்ப் வெளியேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.