``இனி, நீங்கள் அங்கே தொழுகை நடத்த முடியாது!'' - ஹஃபீஸ் சயீத்துக்கு பாகி்ஸ்தானில் வைக்கப்பட்ட செக் | Hafiz Saeed not allowed to lead Eid prayers at Gaddafi stadium

வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (06/06/2019)

கடைசி தொடர்பு:11:35 (06/06/2019)

``இனி, நீங்கள் அங்கே தொழுகை நடத்த முடியாது!'' - ஹஃபீஸ் சயீத்துக்கு பாகி்ஸ்தானில் வைக்கப்பட்ட செக்

வ்வோர் ஆண்டும் ரம்ஜான் தினத்தில், லாகூரின் கடாஃபி  மைதானத்தில் பிரமாண்டமாக ஈகைத் திருநாள் தொழுகை நடைபெறும். ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்பார்கள்.  மும்பை குண்டுவெடிப்புக்கு மூளையாகச் செயல்பட்ட ஹஃபீஸ் சயீத் தலைமையில்தான் இந்தத் தொழுகை நடைபெறும்.   தற்போது,  ஐ.நா அமைப்பு ஹஃபீஸ் சயீத்தை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்துள்ளது. 

ரம்ஜான் தொழுகை நடத்த ஹஃபீஸ் சயீத்

இந்த ஆண்டும் ரம்ஜான் தினத்தில், கடாஃபி மைதானத்தில் தொழுகை நடத்த ஹஃபீஸ் சயீத் அனுமதி கோரினார். இதற்குப் பதிலளித்த பஞ்சாப் மாகாண அரசு, 'இனிமேல் நீங்கள் அங்கே தொழுகையில்  ஈடுபட முடியாது ' என்று மறுத்துவிட்டது. இந்த பதிலால் ஹஃபீஸ்  கடும் அதிர்ச்சியில் உறைந்தார். ஏனென்றால், கடாஃபி மைதானத்தில் ரம்ஜான் நாளில் தொழுகை நடத்துவதை சயீத் பெருமையாகக் கருதுவார் என்று அவருக்கு  நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். 

கடாஃபி மைதானம்

ஈகைத் திருநாள்  தொழுகை நடத்துவதோடு, காஷ்மீர் விடுதலை குறித்தும் இந்த நாளில் மக்களிடையே ஆவேசமாக   உரையாற்றுவதையும் அவர் வழக்கமாகக்கொண்டிருந்தார். பல ஆண்டுகளாக இந்தத் தொழுகைக்கு பாகிஸ்தான் அரசே முழு பாதுகாப்பு அளித்துவந்தது. ஆனால், இந்த ரம்ஜானின்போது, உத்தரவை மீறி ஈகைத் தொழுகையில் பங்கேற்க ஹஃபீஸ் சயீத் சென்றால், அவரைக் கைதுசெய்யவும் போலீஸார் தயார் நிலையில் இருந்தனர்.  வேறு வழியில்லாமல், கடாஃபி மைதானத்தில் நடைபெற்ற ஈகைத் தொழுகையில் அவர் பங்கேற்கும் முடிவை மாற்றிக்கொண்டார். சயீத்தின்  வீடு இருக்கும்  ஜுஹார் நகரப் பகுதியில் உள்ள மசூதியில் இந்த முறை அவர் ஈகைத் தொழுகை நடத்தினார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க