`எதிரி நாடாகத் தெரியவில்லை; உதவும் எண்ணம்தான் தோன்றியது!' - பாகிஸ்தான் மக்களுக்கு உதவிய இந்தியர் | UAE Based Indian Man Installs Hand Pumps In Poor PakIstan

வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (06/06/2019)

கடைசி தொடர்பு:11:37 (07/06/2019)

`எதிரி நாடாகத் தெரியவில்லை; உதவும் எண்ணம்தான் தோன்றியது!' - பாகிஸ்தான் மக்களுக்கு உதவிய இந்தியர்

புல்மாவா தாக்குதல் காரணமாக இந்தியா பால்கோட்டில் தாக்குதல் நடத்திய சமயத்தில், பாகிஸ்தானில் வறட்சியின் பிடியில் சிக்கியிருந்த கிராமத்தில் இந்தியர்கள் அடிபம்புகளை அமைத்துக்கொண்டிருந்த தகவல் வெளியாகியுள்ளது. 

பாகிஸ்தான் மக்களுக்கு உதவி செய்த இந்தியா

சிந்து மாகாணத்தில் உள்ள தர்பார்கர் மாவட்டம் வறுமை நிறைந்தது. பாகிஸ்தானிலேயே மிகவும் பின்தங்கிய பகுதி. வறட்சியின் பிடியில் சிக்கியிருந்த இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் குடிநீருக்காக 25 கிலோ மீட்டர் தொலைவு நடந்து செல்லவேண்டியது இருந்தது. பாகிஸ்தானைச் சேர்ந்த சமூக சேவகர் பீல் காங்கர் என்பவர் துபாயைச் சேர்ந்த இந்திய தொழிலதிபர் ஜோகிந்தர் சிங் சலாரியாவை தொடர்புகொண்டு,  தர்பார்கர் மாவட்ட மக்களின் பரிதாப நிலையை எடுத்துச் சொன்னார். `தயவுசெய்து பெரிய மனம் வைத்து உதவிபுரியுங்கள்' என்றும் சலாரியாவிடம் வேண்டுகோள் விடுத்தார். துபாயில் போக்குவரத்து நிறுவனம் நடத்தும் ஜோகிந்தர் சிங், `பெகல்' என்ற பெயரில் அறக்கட்டளையும் நடத்தி வருகிறார் 

மனதில் எதிரி நாட்டு மக்கள் என்ற எண்ணம் எல்லாம் ஜோகிந்தர் சிங்குக்கு எழவில்லை. புல்மாவா தாக்குதல் நடந்த காலகட்டத்தில்தான் பீல் காங்கரும் ஜோசிந்தர் சிங்கிடம் இந்த வேண்டுகோளை விடுத்தார். உடனடியாக, தர்பார்கர் மாவட்டத்தில் 62 குடிநீர் குழாய்களை அமைக்கும் பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தர்பார்கர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் பொதுமக்கள் தண்ணீர் வசதி பெறும் வகையில் தற்போது குடிநீர் பம்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தானுக்கு உதவிய இந்தியர்

ஜோகிந்தர் சிங் கூறுகையில், ``பாகிஸ்தானில் தார் பாலைவனம் நிறைந்த இந்தப் பகுதியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. வெயில் கொளுத்தும். மழை மறைவுப் பிரதேசம். குழந்தைகள் பள்ளி சென்று படிக்கக்கூட வசதி இல்லை. சாலை வசதி இல்லை. அருகிலுள்ள மருத்துவமனை என்றால், 50 கிலோ மீட்டர் செல்ல வேண்டும். வறுமையின் பிடியில் உள்ள இந்த மக்களின் நிலையைப் பார்த்தபோது எதிரி நாட்டு மக்கள் என்ற எண்ணம் எல்லாம் எனக்குள் எழவில்லை. அவர்களுக்கு உடனடியாக ஏதாவது செய்ய வேண்டுமென்ற எண்ணமே எனக்குள் ஏற்பட்டது. புல்மாவா தாக்குதலையடுத்து இந்திய விமானப்படை பால்கோட்டில் தாக்குதல் நடத்தியபோது நாங்கள் இங்கே அடிபம்புகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தோம். ஊட்டச்சத்துக் குறைவு காரணமாக இங்கு ஏராளமான குழந்தைகள் இறந்து போயிருக்கின்றன. கல்வி வளர்ச்சி மற்றும் குழந்தைகள் நலனின் இந்தப் பகுதியில் அக்கறை செலுத்த முடிவு செய்துள்ளேன்'' என்கிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க